சட்டப்பேரவைக்கு வந்த கிருத்திகா, சபரீசன்.! உதயநிதி மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சபாநாயகர் அப்பாவு

By Ajmal Khan  |  First Published Apr 12, 2023, 8:31 AM IST

தமிழக சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் மானிய கோரிக்கை தாக்கல் செய்த நிலையில், அவரது மனைவி கிருத்திகா உதயநிதி, மைத்துனர் சபரீசன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சட்டப்பேரவை மாடத்தில் இருந்து உதயநிதியின் பேச்சை பார்த்து ரசித்தனர். 
 


 தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மற்றும் கைத்தறித்துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மானிய கோரிக்கையில் முன்னதாக அமைச்சர் காந்தி தனது துறை மீதான அறிவிப்புகளை வெளியிட்டு பேசியிருந்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி தனது பதிலுரையை வழங்கினார். உதயநிதியின் பேச்சை கேட்பதற்காக தமிழக சட்டப்பேரவை மாடத்திற்கு உதயநிதியின் தாய் துர்கா ஸ்டாலின், மனைவி கிருத்திகா, மகள் தன்மயா, தங்கை கணவர் சபரீசன் ஆகியோர் வந்திருந்தனர். அப்போது உரையாற்றிய உதயநிதி தனது துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

Tap to resize

Latest Videos

மேலும் ஐபிஎல் போட்டி தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சுக்கும் பதிலடி கொடுத்திருந்தார். இந்த பேச்சுகளை எல்லாம் உதயநிதியின் குடும்பத்தினர் பேரவை மாடத்தில் இருந்து ரசித்தனர். அமைச்சர் உதயநிதி தனது பேச்சின் நிறைவில் அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் , மேலும் இன்று தனது மகள் தன்மயாவிற்கும் பிறந்தநாள் என்று அமைச்சர் உதயநிதி கூறினார்.  அப்போது குறுக்கிட்டு பேசிய பேரவைத் தலைவர் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தன்மயா இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவிப்பதாக கூறினார்.  மேலும் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த தன்மயாவிற்கு வணக்கம் கூறி தங்களது வாழ்த்தினை தெரிவித்தனர். 

முன்னதாக அமைச்சர் உதயநிதி மானியக் கோரிக்கையில் உரையாற்றுவதை பார்ப்பதற்காக அவரது மனைவி கிருத்திகா உதயநிதி , தாய் துர்கா ஸ்டாலின் , மகள் தன்மயா , சபரீசன் ஆகியோர் பேரவை மாடத்திற்கு வருகை தந்தபோது அமைச்சர்கள் செந்தில்பாலாஜி , பொன்முடி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் மாடத்தை நோக்கி வணக்கம் கூறி உதயநிதி குடும்பத்தினருக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

click me!