கொடுத்த வாக்கை காப்பாற்றிய சபரீசன்...! மகிழ்ச்சியில் கே.சி.ஆர்..!

By Asianet TamilFirst Published May 14, 2019, 10:24 AM IST
Highlights

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வைப்பதாக அவரது மருமகன் சபரீசன் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு கொடுத்த வாக்குறுதி ஒருவழியாக நிறைவேறியுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வைப்பதாக அவரது மருமகன் சபரீசன் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு கொடுத்த வாக்குறுதி ஒருவழியாக நிறைவேறியுள்ளது.

பாஜக காங்கிரசுக்கு மாற்றாக மத்தியில் புதிதாக ஒரு அணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சந்திரசேகர ராவ் தரப்பு கூறிவருகிறது. ஆனால் உண்மையில் தேர்தலுக்குப் பிறகு பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க மோடி அமித்ஷா கூட்டணி ஆயத்தமாகி வருகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கு சந்திரசேகர ராவ் கடந்த ஆண்டே ஒப்புதல் தெரிவித்து தான் சட்டமன்ற தேர்தலை தெலுங்கானாவில் முன்கூட்டியே நடத்தி கொண்டதாகவும் ஒரு பேச்சு உண்டு. அதற்குப் பிரதிபலனாகவே பாஜக கூட்டணிக்கு தற்போது சந்திரசேகர ராவ் ஆள் பிடித்து வருவதாகவும் சொல்கிறார்கள். 

அந்த வகையில் ஸ்டாலினை சந்திக்க வேண்டும் என்று தமிழகத்தில் தேர்தல் முடிந்த ஏப்ரல் 18-ம் தேதியன்று சந்திரசேகர ராவ் தரப்பிலிருந்து நேரம் கேட்கப்பட்டது.. இதனையடுத்து ஏப்ரல் 20-ம் தேதி சந்திரசேகர ராவ் சென்னை வந்து ஸ்டாலினை சந்தித்து அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றது. ஆனால் திடீரென ஸ்டாலின் சந்திரசேகராவை சந்திக்க மறுத்துவிட்டார். இதன் பிறகு சந்திரசேகர ராவ் உத்தரத்திலிருந்து ஸ்டாலினை சந்திக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

இந்த முறை ஸ்டாலின் மருமகன் சபரீசன் மூலமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சந்திப்பதற்கு முதலில் ஓகே சொல்லப்பட்டது. ஆனால் இடைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த சந்திப்பு நடைபெற வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் சிலர் கொடுத்த அழுத்தம் காரணமாக சந்திரசேகர ராவை சந்திக்க ஸ்டாலின் தரப்பு யோசித்தது. 

இருந்தாலும் தமிழகத்தை விட்டு தாங்கள் செல்ல வேண்டாம் நிச்சயமாக மாமாவை தங்களை சந்திக்க வைக்கிறேன் என்று சந்திரசேகர ராவுக்கு சபரீசன் நேரடியாக வாக்கு கொடுத்ததாகவும் அந்த வாக்கின் அடிப்படையிலேயே நேற்றைய சந்திப்பு நடைபெற்றதாகவும் திமுக தரப்பில் கிசுகிசுக்கப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நான்கு நாட்கள் காத்திருந்ததற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக சபரீசன் இடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார் சந்திரசேகர ராவ்.

click me!