அமைச்சரவை அமைப்பு.. கிச்சன் கேபினட்டை தள்ளி வைத்த ஸ்டாலின்.. இலாக ஒதுக்கீட்டில் புகுந்து விளையாடிய சபரீசன்..!

By Selva KathirFirst Published May 7, 2021, 10:44 AM IST
Highlights

அமைச்சர் பதவி யார் யாருக்கு என்பதில் மு.க.ஸ்டாலின் மிக உறுதியான முடிவை எடுத்த நிலையில் இலாகா ஒதுக்கீட்டில் அவரது மருமகன் சபரீசன் நினைத்ததை சாதித்துக் கொண்டதாக கூறுகிறார்கள்.
 

அமைச்சர் பதவி யார் யாருக்கு என்பதில் மு.க.ஸ்டாலின் மிக உறுதியான முடிவை எடுத்த நிலையில் இலாகா ஒதுக்கீட்டில் அவரது மருமகன் சபரீசன் நினைத்ததை சாதித்துக் கொண்டதாக கூறுகிறார்கள்.

இதுநாள் வரை மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் பதவி என்பது மரபாக இருந்து வந்தது. ஆனால் அதனை எல்லாம் தவிடுபொடியாக்கி 13 மாவட்டங்களில் யாருக்கும் ஒரு அமைச்சர் பதவியை கூட ஸ்டாலின் வழங்கவில்லை. அதே சமயம் சிறிய மாவட்டங்களான தூத்துக்குடி, புதுக்கோட்டைக்கு தலா 2 அமைச்சர் பதவிகளை ஸ்டாலின் வழங்கியுள்ளார். இதற்கு முழுக்காரணம் அமைச்சர்களை தேர்வு செய்வதில் ஸ்டாலின் தன்னிச்சையாக செயல்பட்டதாக கூறுகிறார்கள். யார் யார் அமைச்சர்கள் என்பதில் ஸ்டாலின் தனது கிச்சன் கேபினட்டையோ அல்லது திமுக சீனியர்களையோ பொருட்படுத்தவில்லை என்று சொல்கிறார்கள்.

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் சமயங்களில் தமிழகம் முழுவதும் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அனைத்து மாவட்டங்களிலும் தங்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது. அப்போது முதலே கட்சியில் சிறப்பாக செயல்படுபவர்கள் யார், வெற்று விளம்பரம் யார் என்பதை எல்லாம் ஸ்டாலின் குறித்து வைத்துக் கொண்டதாக சொல்கிறார்கள். இப்போது சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் கூட அவர் குறிப்பிட்டுக் கூறிய தொகுதிகளில் வெற்றி பெறவில்லை என்றால் நடவடிக்கை இருக்கும் என்று அவர் எச்சரித்துவிட்டே வருகை தந்திருந்தார். அப்படி இருந்தும் கோவையில் திமுகவால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை.

இதே போல் சேலத்தில் ஒரே ஒருதொகுதியில் மட்டுமே திமுக வெற்றி பெற்று இருந்தது. மாவட்ட கோட்டா அடிப்படையில் சேலம் ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்டாலின் அவ்வாறு செய்யவில்லை. இதே போல் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஒரே ஒரு தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக்கட்சிகள் வெற்றி பெற்றன. ஆனால் இந்த மூன்று மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சர் பதவியை கூட ஸ்டாலின் வழங்கவில்லை. ஆனால் அருகாமை மாவட்டமான புதுக்கோட்டைக்கு 2 அமைச்சர் பதவிகளை வழங்கியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க இலாக்கா ஒதுக்கீட்டில் திமுக சீனியர்கள் அனைவரும் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். துரைமுருகனுக்கு நீர்பாசனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது அந்த அளவிற்கு பசை உள்ள இலாகாவாக இல்லை என்றாலும் கனிமவளத்துறை அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐ பெரியசாமிக்கு வெறும் கூட்டுறவுத்துறை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல் திமுக சீனியர்கள் பொன்முடி, எம்ஆர்கே பன்னீர் செல்வம் போன்றோருக்கு அவர்கள் எதிர்பார்த்த இலாகா கிடைக்கவில்லை. ஆனால் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை கொடுக்கப்பட்டுள்ளது.

இதே போல் திமுகவில் இரண்டு வருடங்களுக்கு முன்பு இணைந்த ராஜகண்ணப்பனுக்கு முக்கியமான போக்குவரத்து துறை கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஈரோடு முத்துசாமிக்கு வீட்டு வசதித்துறை எனும் வளம் கொழிக்கும் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று துறைகளையுமே திமுக சீனியர்கள் மூன்று பேர் குறி வைத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு கொடுக்கப்படாமல் கட்சியில் அண்மையில் இணைந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இதன் பின்னணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் இருப்பதாக சொல்கிறார்கள். இந்த மூன்று முக்கியத்துறைகளையும் தனக்கு நெருக்கமான மூன்று பேருக்கு கொடுத்திருப்பதன் மூலம் அதனை தான் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கருதியிருக்கலாம் என்கிறார்கள்.

இதனிடையே அமைச்சர்கள் மற்றும் இலாக்காக்கள் அறிவிப்பிற்கு பிறகு அமைச்சர்களாக பதவி ஏற்கும் அனைவரும் ஸ்டாலினை சந்திக்கச் சென்றனர். அப்போது குறிப்பிட்ட சிலர் தங்களுக்கு எதிர்பார்த்த இலாகாக கிடைக்கவில்லை என்பதை சபரீசனிடம் நேரடியாக சொல்லி வருத்தப்பட்டுள்ளனர். அதிலும் கட்சியில் அண்மையில் இணைந்தவர்களுக்கு முக்கியத்துறைகளை கொடுத்துவிட்டு காலம் காலமாக கட்சிக்காக உழைக்கும் தங்களுக்கு ஒன்றும் இல்லாத துறையை கொடுத்துள்ளீர்கள் என்று சிலர் சபரீசனிடம் ஆதங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

click me!