1971ம் ஆண்டு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி திமுக வெற்றி பெற்றதோ அது போல் 2024ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று காட்டுவோம் என ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
திமுக தேர்தலுக்கு பயப்படுகிறதா.?
சென்னையை அடுத்த நங்கநல்லூரில் திமுக அரசின் சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் மகளிர்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ். பாரதி, பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் தேர்தல் என்றால் ஸ்டாலின் பயப்படுகிறார் என அரைவேக்காடுகள் சொல்லுகின்றன. 1971ம் ஆண்டு ஒரு ஆண்டு காலம் இருந்தாலும் அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி துணிச்சலாக சட்டமன்றத்தை கலைத்து விட்டு பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தலை சந்தித்த இயக்கம் திமுக என கூறினார்.
வரலாறு மீண்டும் திரும்புகிறது
1971ம் ஆண்டு பெரியார் ராமாயணத்தை எதிர்த்து மாநாடு நடத்தினார். அப்போது பெரியார் மீது ஒருவன் செருப்பை தூக்கி அடித்தான். அந்த செருப்பு கீழே விழுந்ததால் அதை எடுத்து வேறு ஒருவன் வீசிய போது ராமர் படத்தின் மீது விழுந்தது. இதை வைத்து பெரிய அரசியல் செய்தனர். அப்போது அரசியலுக்கு வந்த சோ மெரினா கடற்கரையில் பெரிய கூட்டம் நடத்தினார்.
சோவிற்கு கூடிய கூட்டத்தை பார்த்து பயந்தோம். ஆனால் தேர்தல் நடந்து முடிவு 184 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. அந்த வரலாறை யாரும் உடைக்கவில்லை.அதே போல பாராளுமன்ற தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றது. 52 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வரலாறு திரும்பி உள்ளது. 1971ம் ஆண்டு எப்படி திமுக வெற்றி பெற்றதோ அது போல் 2024ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று காட்டுவோம் என தெரிவித்தார்.
கும்மிடிப்பூண்டியை தாண்டினால் யாருக்கு தெரியாதா.?
அண்ணாமலை பாஜக தலைவரான போது கும்மிடிப்பூண்டியை தாண்டினால் மு.க.ஸ்டாலினை யாருக்கு தெரியும் என கேட்டார். ஆனால் இன்று உதயநிதி ஸ்டாலினுக்கு மோடியும் அமித்ஷாவும் பதில் சொல்லுகிறார்கள். இந்தியாவே திமுகவையும், ஸ்டாலினையும் பற்றி தான் பேசுகிறது. உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி என சொன்ன சாமியார் வீட்டிற்கு வருமான வரி, அமலாக்க துறை சோதனை நடத்த வேண்டும். நாங்கள் களத்தில் இறங்கினால் வேறு மாதிரியாக இருக்கும். நாங்கள் ஜெயிலுக்கு போனவர்கள். போலீஸ் நிலையம் சென்றால் கடிதம் எழுதி தருபவர்கள் அல்ல என ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
இதையும் படியுங்கள்
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் பாமக ஆட்சியை பிடிக்கும்..! அடித்து கூறும் அன்புமணி