கடந்த மக்களவைத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் நாம் வெற்றி வாய்ப்பு இழந்தது ஏன் என அறிந்து அதற்கு ஏற்றவாறு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொண்ட அன்புமணி வருகிற மக்களவைத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என கூறினார்.
தேர்தலுக்கு தயாராகுங்கள்
தர்மபுரி சட்டப் பேரவைத் தொகுதி பாமக வாக்குச் சாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் வாக்கு சேகரிப்பு தொடர்பாக ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசும்போது, தமிழகத்தில் வருகிற மக்களவைத் தேர்தலுக்கு நாம் இப்போதே தயாராக உள்ளோம். இந்த தேர்தலுக்கான களப்பணியில் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
ஒவ்வொரு வீடாக நேரடியாக சென்று வாக்காளர்களை அடிக்கடி சந்திக்க வேண்டும். தொடர்ந்து அவர்களை நாம் சந்திப்பதன் மூலம் அவர்களின் ஆதரவை பெற முடியும். கடந்த மக்களவைத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் நாம் வெற்றி வாய்ப்பு இழந்தோம். எதற்காக நாம் இழந்தோம் என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும்.
தமிழகத்தில் பாமக ஆட்சி
வருகிற மக்களவைத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் பாமக போட்டியிடும். இதில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்.தமிழகத்தில் பாமக என்கிற ஒரு கட்சி இல்லை என்றால் மது ஆறாக ஓடும். தெருவுக்கு தெரு மது கடைகளை திறந்து இருப்பார்கள். ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் மதுவை கொடுத்திருப்பார்கள். நாம் தொடர்ந்து போராடுவதன் மூலம் தமிழகத்தில் பூரண மது விலக்கை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வோம்.
தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். ஒவ்வொரு தொகுதியாக சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து வருகிறேன். மக்களின் மனதில் மிகப்பெரிய மாற்றம் உள்ளது. இதன் மூலம் வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் பாமக ஆட்சி அமைக்கும். இதற்கு நாம் அனைவரும் தயாராக வேண்டும் என அன்புமணி கேட்டுக்கொண்டார்.
இதையும் படியுங்கள்
பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு தாவிய 10 முக்கிய தலைவர்கள்.. பீதியில் பாஜக.. என்ன நடக்கிறது?