
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அதிமுக வேட்பாளர்களுக்காக 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2016 ஆம் ஆண்டுதமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.
தேர்தலை முன்னிட்டு வாக்குக்கு பணம், பொருட்கள் தருவதை கடுமையான நடவடிக்கைகள் மூலம் தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையர் வலியுறுத்தி இருந்தார். அதேபோல், தேர்தலுக்கு முன்னரே பணம் கொடுப்பதை வருமான வரித்துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 134 தொகுதிகளையும், திமுக கூட்டணி 98 தொகுதிகளையும் வசப்படுத்தின. 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ரூ.9000 கோடி வரை செலவிட்டதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலின்போது ஓட்டுக்களை விலைக்கும் வாங்கும் பொருட்டு அதிமுக வேட்பாளர்களுக்கு தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் ரூ.5000 கோடிக்கும் மேல் விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதாவது ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.15 கோடி முதல் ரூ.100 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானதை அடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் காலியாக இருந்த நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. ஜெ. மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிளவு பட்ட நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணியின் சார்பாக டிடிவி தினகரனும், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் சார்பாக மதுசூனனும் போட்டியிட்டனர். திமுக சார்பில் மருதுகணேஷ் உள்ளிட்ட 62 பேர் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து வருமானவரித்துறை தீவிர சோதனை நடத்தியது. சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவில் விஜயபாஸ்கர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், அதில் வாக்காளர்களுக்கு
பணம் அளிப்பது தொடர்பான ஆவணங்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது. வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணங்களில் அமைச்சர்கள் சிலரின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தன. ஒரு வாக்காளருக்கு ரூ.4000/- வரை என வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது., இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை, ரத்து செய்து தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நிலையில், சசிகலா, தினகரன் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்
நாடு முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 5 நாட்களாக நடைபெறும் சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக
கூறப்படுகிறது.
ஜெயா தொலைக்காட்சியில் 5 நாட்கள் நடைபெற்ற சோதனை தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் 4 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மிடாஸ் மது ஆலை, கோடநாடு எஸ்டேட், கிருஷ்ணபிரியா மற்றும் விவேக் ஜெயராமனின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. தற்போது சோதனையில் சிக்கிய ஆவணங்களை மதிப்பிடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் சோதனையில், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஓட்டுக்களை விலைக்கு வாங்க, 234 தொகுதிகளுக்கும் அதிமுக வேட்பாளர்களுக்கு ரூ.5000 கோடி வரை விநியோகம் செய்ததை நிரூபிக்கும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஓட்டுக்களை விலைக்கு வாங்க யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள்; அந்த பணம் எவ்வாறு விநியோகம் செய்யப்பட்டது; விநியோகிக்கப்பட்ட பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டால் மட்டுமே உண்மை தெரியவரும்.