ரூ.300 கோடி சொத்துகள் முடக்கம்... சசிகலா விடுதலைக்கு முட்டுக் கட்டை?

By Thiraviaraj RMFirst Published Sep 1, 2020, 4:33 PM IST
Highlights

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, விடுதலையாகும் நாளை எண்ணிக் கொண்டிருக்கிறார். 

மத்திய அரசு, கடந்த 2017 நவம்பர், 8 ஆம் தேதி 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என, அதிரடியாக அறிவித்தது. அந்த சமயத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.  இதனையடுத்து, 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

சென்னை, ஈக்காட்டுதாங்கலில் உள்ள, ஜெயா, ‘டிவி’அலுவலகம், மிடாஸ் மதுபான ஆலை உள்ளிட்டவற்றிலும் சோதனை நடந்தது. ஐந்து நாட்களாக நடந்த சோதனையில், சசிகலா குடும்பத்தினர், 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை துவக்கி, 1,500 கோடி ரூபாய் வரை, வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல நூறு கோடி ரூபாய்க்கு, சொத்துக்களில் முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்களும் சிக்கின. இதனையடுத்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்த வழக்கில் சசிகலா பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சசிகலா தரப்பினர் 2003-2005ம் ஆண்டுகளில் வாங்கிய சொத்துக்களை வருமானவரித் துறையினர் முடக்கியுள்ளனர். சென்னை போயஸ் கார்டன், தாம்பரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சொத்துக்களில், ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டன் வேதா நிலையத்திற்கு எதிரே கட்டிக்கொண்டிருக்கும் புதிய கட்டிடமும் அடங்கும்.

பினாமி தடுப்புப் பிரிவு சட்டத்தின்கீழ் தற்போது, ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பினாமி பிரமுகர்களுக்கும் அந்த சொத்துக்களை பத்திரப்பதிவு செய்த அலுவலகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.பினாமி சொத்துக்கள் தொடர்பாக சசிகலா தரப்பினருக்கு ஏற்கனவே ஒருமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், 2-வது முறையாக தற்போது வேறு சில சொத்துக்களை குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, விடுதலையாகும் நாளை எண்ணிக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்கு முன் அவர் நிச்சயம் விடுதலையாகி விடுவார் என்று அவரது கட்சியினர் எதிர்பார்த்து கொண்டிருப்பதால் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

click me!