திருட்டு கும்பலால் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ குடும்பத்திற்கு ரூ.30 ஆயிரம் உதவி.. நெகிழ வைத்த பிச்சைக்காரர்.!

By Thiraviaraj RMFirst Published Dec 21, 2021, 2:24 PM IST
Highlights

நெகிழ வைக்கும் சம்பவத்தை முதியவர் பாண்டியன் நிகழ்த்தியுள்ளார்.

திருச்சி அருகே ஆடு திருடும் சிறுவர்களால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சிறப்பு எஸ்ஐ பூமி நாதன் குடும்பத்திற்கு முதியவர் பாண்டியன் ரூ.30 ஆயிரம் வழங்கி நெகிழ வைத்துள்ளார். 

பெரும்பணக்காரர்கள் கூட பிறருக்கு உதவ முன்வருவதில்லை. ஆனால் ஊர் ஊராக பிச்சை எடுத்து வரும் முதியவர் பாண்டியன் அந்தப்பணத்தை தனக்காக வைத்துக் கொள்ளாமல் பலருக்கும் உதவி வருகிறார். அந்த வகையில் பிச்சை எடுத்த பணத்தை திருச்சி சிறப்பு எஸ்.ஐ குடும்பத்திற்கு வழங்கியுள்ளார். 

திருச்சி மாவட்டம், நவல்பட்டு பகுதியில் சிறப்பு எஸ்.ஐ ஆக பூமிநாதன் பணியாற்றி வந்தார். இவர் கடந்த மாதம் ஆடு திருடும் சிறுவர்கள் இருவரால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சிறுவர்களால் எஸ்.ஐ வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியது. அவரது குடும்பத்திற்கு தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் 1 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கினார். 

இந்த நிலையில் தான் நெகிழ வைக்கும் சம்பவத்தை முதியவர் பாண்டியன் நிகழ்த்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் பிச்சை எடுக்கும் பணத்தை பொது பயன்பாட்டுக்காக வழங்குவது வழக்கம். கொரோனா தொற்று காலத்தில் ரூபாய் 3.40 லட்சம் பணத்தை நிவாரண நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம்  வழங்கினார். இதற்காக சுதந்திர தினத்தன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் இவரை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிலையில், 30 ஆயிரம் ரூபாய் பணத்தை மறைந்த சிறப்பு எஸ்ஐ பூமிநாதனின் குடும்பத்துக்கு நிதியாக வழங்குவதாக கூறி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

 

இதுகுறித்து அவர், ‘சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் வெட்டிக்கொலை செய்யப்பட்டதை அறிந்து மன வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என நினைத்தேன். அதனால் பொதுமக்களிடம் யாசகமாக பெற்ற 30 ஆயிரம் ரூபாயை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளேன்’ என கூறினார். அவரது செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது. 

click me!