
மும்பை
ரூ.40 ஆயிரம் கோடி பட்ஜெட் வைத்துக்கொண்டு டெல்லியில் பள்ளிக் கூடங்களை சீரமைக்கவும், புதிதாக கட்டவும் முடிகிறது ஆனால், ரூ.3 இலட்சம் கோடி பட்ஜெட்டை வைத்துக் கொண்டு மராட்டிய அரசு பள்ளிக் கூடங்களை மூடி வருகின்றது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சுட்டி காட்டினார்.
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் தாயார் ஜிஜாபாயின் பிறந்தநாளை ஓட்டி அவர் பிறந்த இடமான புல்தானா மாவட்டம், சிந்த்கேட் ராஜாவில் உள்ள நினைவிடத்தில் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், அங்கு நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர், "ஒட்டுமொத்த உள்ளார்ந்த சமூகத்தை அடைய வேண்டும் என்ற இலக்கில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி பாடுபட்டார்.
பீமா கோரேகாவில் தலித் மக்கள் மீது பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நடத்திய தாக்குதல் காரணமாக சாதி மோதல் ஏற்பட்டது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். சாதி, சமயம் மற்றும் ஆட்சியின் அடிப்படையில் கலவரத்தை தூண்டுவதே பா.ஜனதாவின் பேராசை.
அரசு செலவில் தனியார் பள்ளிக் கூடங்கள் செழித்து வளர மராட்டிய அரசு அனுமதி அளிக்கிறது. அரசு பள்ளிக் கூடங்களை நிர்வகிக்க இயலாத அரசு, ஆட்சியில் இருப்பதற்கு உரிமை இல்லை.
சமூக சீர்திருத்தவாதிகளான மகாத்மா புலே, சாவித்திரி பாய் புலேயின் கனவை மராட்டிய பா.ஜனதா அரசு நசுக்கிவிட்டது.
நான் டெல்லி முதலமைச்சராக பதவி ஏற்ற சமயத்தில், ஏழை பெற்றோர் மட்டுமே தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைத்தனர். மூன்று ஆண்டுகளில், நவீன வசதிகளுடன் 300 புதிய பள்ளிக் கூடங்களை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.
டெல்லி அரசின் பட்ஜெட் ரூ.40 ஆயிரம் கோடிதான். இருந்தாலும், பள்ளிக் கூடங்களை சீரமைக்கவும், புதிய பள்ளிக் கூடங்கள் கட்டவும் எங்களால் முடிகிறது.
மராட்டிய அரசின் பட்ஜெட் ரூ.3 இலட்சம் கோடி. ஆனாலும், அரசு பள்ளிக் கூடங்கள் இங்கு மூடப்பட்டு வருகின்றன.
முன்பெல்லாம் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்பட்ட டெல்லியில் இன்றைக்கு மின்கட்டணம் மிகவும் குறைவாக இருக்கிறது. விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு இலாபகரமான விலை கிடைக்கும் வகையில், சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி, விவசாயிகள் ஒன்று திரண்டு போராட வேண்டும்.
டெல்லியில் பருவம் தவறிய கனமழையால், பயிர் நாசத்தை சந்தித்த விவசாயிகளுக்கு எக்டேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் நாங்கள் இழப்பீடு வழங்கினோம்" என்று அவர் பேசினார்.