
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் கொடுக்க அதிமுகவினர் திட்டமிட்டுள்ளதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறினார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:-
தமிழகத்தின் பொருளாதார நிலை மோசமாகி கொண்டு இருக்கிறது. தமிழகத்தின் நேரடி கடன் ரூ.3.14 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. பொதுத்துறை கடன்களும் சேர்த்தால் இது ரூ.5.75 லட்சம் கோடியாக உள்ளது.
5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் இருந்தால் அவர்களது கடன் ரூ.4 லட்சம் என கணக்கிடலாம். தமிழகத்தில் நிதி நிலைமை இந்த அளவுக்கு மோசமாக காரணம் திறமையற்ற நிர்வாகமும், மோசமான நிதிநிலைகளுமே ஆகும்.
வருவாயின் முக்கால் வாசியை இலவசத்திற்கு கொடுத்து விட்டதால், அரசு ஊழியர் ஊதியம், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு எங்கிருந்து செலவு செய்ய முடியும். எனவே தமிழகத்தில் பொருளாதார நிலையை வல்லுனர்குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.
ஆர்.கே.நகர் தேர்தலை பொறுத்தவரையில் அதிமுக சார்பில் ஒரு வாக்காளருக்கு ரூ.10 ஆயிரம் வழங்குவதாக திட்டமிட்டு ரூ.2 ஆயிரம் டோக்கனாக கொடுத்துள்ளனர்.
எனவே ஆர்.கே. நகருக்கு வெளிமாநிலங்களை சேர்ந்த பார்வையாளர்கள், மத்திய படைகள் அனுப்பவேண்டும். நேர்மையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் ஒரு பினாமி ஆட்சி, ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஊழலுக்குத்தான் கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். முன்பு மேலிடம் என்று கூறுவார்கள். இப்போது இரண்டு மூன்று மேலிடங்கள் உள்ளன. எல்லாமே மன்னார்குடி கூட்டம்தான்.
பரப்பன அக்ரஹார சிறையில் இருந்தும் உத்தரவுகள் வருகிறது. இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கமாட்டோம் என்று போட்டியிடுகின்ற கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் எழுதி கையெழுத்து போட்டு கொடுக்கும் நிலைமை வந்தால் பா.ம.க போட்டியிடலாம்.
தமிழகத்தில் ஆளும் எடப்பாடி அரசுக்கு பூஜ்ஜியத்துக்கு கீழ் உள்ள மதிப்பெண்தான் வழங்க முடியும். தமிழகத்தில் ஆவிகள் ஆளுகின்றது. பட்ஜெட்டை ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வைத்தது போன்ற அசிங்கம் வேறு இல்லை. மேலும், பரப்பன அக்ரஹார சிறைக்கு கொண்டு சென்று தொட்டுவிட்டு வந்திருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.