
ஆர்.கே.நகரில் இரட்டை இலைச் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக சசிகலா பதிலளிக்க தேர்தல் ஆணையம் விதித்திருந்த கெடு இன்றுடன் முடிவடைகிறது.
பிரபல கிரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் டூவிஸ்ட்களைக் காட்டிலும், அதிமுகவின் இரு அணிகளுக்கு இடையே கணிக்க முடியாத வகையில் அதிரடி திருப்பங்கள் நித்தம் நித்தம் அரங்கேறி வருகின்றன. போதாத குறைக்கு தீபாவும் தன் பங்குக்கு தெறிக்க விடுகிறார்.
ஆர்.கே.நகரில் இரட்டை இலைச் சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்று டிடிவி தினகரன் தடதடக்க, படபடத்துப் போன பன்னீர் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் பற்ற வைக்க, இதனால் ஒட்டுமொத்த தமிழகமே அரசியல் ஜுரத்தால் தகித்து வருகிறது.
இந்தச் சூழலில் இரட்டை இலைச்சின்னம் குறித்து ஓ.பி.எஸ்.அணி தாக்கல் செய்த மனு குறித்து 20 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதற்கான கெடு இன்றுடன் நிறைவடைகிறது.
இதனைத் தொடர்ந்து ஆணையத்திற்கு பதிலளிக்க சசி அணியினர் தயாராகி உள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளிடம் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இரட்டை இலையை கைப்பற்ற இரு அணிகளுக்கும் இடையே நடக்கும் யுத்தத்திற்கான முடிவு மார்ச் 22 ஆம் தேதிக்குப் பிறகு தெரிய வரும்.