இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000.. அமைச்சர் எ.வ.வேலு சொன்ன தித்திக்கும் நல்ல செய்தி..!

By vinoth kumarFirst Published Jul 23, 2021, 12:30 PM IST
Highlights

நாங்கள் ஐந்தாண்டு காலம் ஆட்சிபுரிய மக்கள் அனைவரும் வாக்களித்து தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தக் காலக்கட்டத்துக்குள் நிதிநிலை உள்பட அனைத்து துறைகளையும் சீராக்குவோம். தேர்தல் வாக்குறுதியில் சொல்லாததையும் நிறைவேற்றி வருகிறோம். 

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம்  கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

மதுரையில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அதிகாரிகள் 5 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எ.வ.வேலு;- ஊராட்சி, ஒன்றிய சாலைகளை தரம் உயர்த்த எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 2,000 கிலோமீட்டர் சாலைகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.

நில எடுப்புப்பணிகள் காரணமாக நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நில எடுப்புப்பணியை விரைவுபடுத்த ஐந்து மாவட்ட வருவாய் அலுவலர்களை நியமனம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் உத்தரவின்படி நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலை ஓரங்களில் மரங்கள் நடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பழனி - கொடைக்கானல் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கொடைக்கானல் - மூணாறு இடையே சாலை அமைக்க கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழர்களின் அடையாளமாக விளங்கும் கீழடியில் கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நூலக இடம் தேர்வு குறித்து முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டு, அவர் அனுமதி அளித்ததுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். கிழக்கு கடற்கரை சாலை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒற்றை முறை டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாங்கள் ஐந்தாண்டு காலம் ஆட்சிபுரிய மக்கள் அனைவரும் வாக்களித்து தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தக் காலக்கட்டத்துக்குள் நிதிநிலை உள்பட அனைத்து துறைகளையும் சீராக்குவோம். தேர்தல் வாக்குறுதியில் சொல்லாததையும் நிறைவேற்றி வருகிறோம். அதனால், சொல்வதைதான் செய்வோம், செய்வதைதான் சொல்வோம். ஆனால். கட்டாயம் செய்வோம். கட்டாயம் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று கூறினார்.

click me!