குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 தொகை... ரேஷன் அட்டையில் பெயர் மாற்றணுமா..? பரபரப்பு விளக்கம்!

By Asianet TamilFirst Published Aug 4, 2021, 8:47 AM IST
Highlights

குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் உரிமைத் தொகை திட்டத்துக்கு ரேஷன் அட்டையில் பெயர் மாற்ற வேண்டுமா என்பது பற்றி உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
 

தேர்தல் அறிக்கையில் திமுக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. திமுக ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அந்தத் தொகை எப்போது வழங்கப்படும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இன்னொருபுறம் 1000 ரூபாயைப் பெற ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவர்களாக இருக்கும் கணவர்களுக்குப் பதிலாக குடும்பத் தலைவிகளாக மனைவி பெயர்களை மாற்றும் போக்கு அதிகரித்திருக்கிறது. பல மாவட்டங்களில் உணவு பொருள் வழங்கல் அலுவலகத்தில் இதற்காக மனுக்கள் குவிந்தன. இதேபோல ஆன்லைனிலும் குடும்பத் தலைவர் நிலையை மாற்ற பலரும் முயன்றதால் சர்வர் முடங்கியது.


கடந்த 3 மாதங்களாகவே இந்தக் காட்சிகள் அவ்வப்போது அரங்கேறிவருகின்றன. ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவர் அந்தஸ்தில் பெண்கள் இருந்தால் மட்டுமே 1000 ரூபாயை வழங்கப்படும் என்ற வதந்தியால், இதுபோன்ற காட்சிகள் அரங்கேறிவருகின்றன. இதுபோன்ற செய்திகள்  மீடியாக்களில் வந்தபோதும், அரசு இதுபற்றி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்நிலையில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி இதுதொடர்பாக தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் சக்கரபாணி பேசுகையில், “குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் பற்றிய அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார். இத்திட்டத்துக்காக ரேஷன் அட்டைகளை மனைவியின் பெயருக்கு மாற்றம் செய்ய பலர் முற்படுகிறார்கள். அதற்காக இ-சேவை மையங்களில் காத்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இதில் யாரும் பீதி அடைய தேவையில்லை. இத்திட்டம் பற்றி உரிய நேரத்தில் முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார்.” என்று தெரிவித்தார்.
 

click me!