குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1000 எப்போ தருவீங்க.? கொடுக்கலைன்னா.. திமுக அரசுக்கு அதிமுக எச்சரிக்கை!

By Asianet TamilFirst Published Jul 10, 2021, 8:41 AM IST
Highlights

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றாவிட்டால் மாபெரும் போராட்ட நடத்துவோம் என்று அதிமுக எச்சரித்துள்ளது. 
 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் உட்கட்சிப் பிரச்சினை, உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. பின்னர் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1: கடந்த திமுக ஆட்சிக் காலங்களில், தமிழ் நாட்டின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கத் தவறியது போல் அல்லாமல், இப்பொழுதேனும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும்படியாக மேகதாதுவில் அணை கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். 
தீர்மானம் 2: விவசாய இடுபொருட்களின் விலை உயர்வு; சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு; மருத்துவத் தேவைகளுக்கான கட்டண உயர்வு என்று எட்டுத் திசையில் இருந்தும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுவதால் தமிழ் நாட்டு மக்கள் படும் துயரம் பெரும் வேதனையைத் தருகிறது. விரைந்து செயலாற்றி, விலைவாசியைக் கட்டுப்படுத்தி, வேலை வாய்ப்புகளைப் பெருக்கி, நம் மக்களின் துன்பம் துடைக்க முன் வருவீர் என்று அரசாள வந்திருப்போரை அதிமுக கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 3: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும் ! ஆட்சிக்கு வந்தவுடன் இவற்றின் விலைகளைக் குறைப்பதாக கொடுத்த வாக்குறுதியை மாநில ஆட்சியாளர்கள் நிறைவேற்ற வேண்டும்!ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் விலையை 5 ரூபாயும், டீசல் விலையை 4 ரூபாயும் குறைப்பதாக வாக்குறுதி அளித்த தி.மு.க., உடனடியாக இந்த விலை குறைப்பை அமல்படுத்துவதுதான் நாணயமான செயல் என்பதை இக்கூட்டம் சுட்டிக்காட்டுகிறது. எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை இதுவரை அமல்படுத்தாததற்கு தி.மு.க. அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றாவிடில் மக்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று இக்கூட்டம் எச்சரிக்கிறது.
தீர்மானம் 4:தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், தமிழக மக்களின் நலன்களைப் பேணுவதிலும் தன்னிகரில்லாது செயல்பட்ட அதிமுக பொற்கால ஆட்சியைப் பற்றி அவதூறு பரப்பியும், நூற்றுக்கணக்கான வாக்குறுதிகளை அளித்தும், தேர்தலில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் ஆட்சிக்கு வந்திருக்கும் தி.மு.க., அந்த வாக்குறுதிகளை செயல்படுத்துவது குறித்து இன்னும் வாய் திறக்காதிருப்பதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. தேர்தல் அறிக்கையில் அளித்திருக்கும் நூற்றுக்கணக்கான வாக்குறுதிகளை நிறைவேற்ற தி.மு.க. அரசு உடனடியாக ஒரு கால அட்டவணையை வெளியிட வேண்டும். வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும், குறிப்பாக, பெண்கள் நலன் சார்ந்து அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்.
தீர்மானம் 5: தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000/- ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழ் நாட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும். இல்லையேல், தமிழ் நாட்டு மக்களின் பேராதரவோடு, தாய்மார்களின் பங்கேற்போடு மாபெரும் போராட்டத்தை நடத்துவோம். 
தீர்மானம் 6: விவசாயிகள், தாங்கள் விளைவித்த நெல்லை குறித்த நேரத்தில் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி விரயம் ஏற்படுவதற்குக் காரணமான தமிழக அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு, உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

click me!