
சென்னை மலையம்பாக்கத்தில் பிரபல ரௌடி பினுவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது, அதிரடியாக போலீஸ் அடித்த ரெய்டில் 75 ரௌடிகள் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய 100 க்கும் மேற்பட்ட ரௌடிகள் புதுச்சேரியில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து தமிழக போலீஸ் டீம் துப்பாக்கியுட்ன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ரௌடி பினு தனது கூட்டாளிகளுடன் மாங்காடு அருகே உள்ள வடக்கு மலையம்பாக்கத்தில் தனது பிறந்தநாள் விழாவை பிரமாண்டமாக பெரிய அளவில் கொண்டாடினார். இது பற்றிய தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்று சுற்றி வளைத்து 75 ரௌடிகளை கைது செய்தனர். அவர்களிடம் சோதனை நடத்தி பட்டாக்கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்லு மதன் என்ற ரவுடியை சென்னை மத்திய குற்றப்பிரிவின் ரவுடி ஒழிப்பு போலீசார் பள்ளிக்கரணை பகுதியில் மடக்கிப்பிடித்தனர். அவர் வெளியிட்ட தகவலின் அடிப்படையில்தான் வடக்கு மலையம்பாக்கத்தில் 75 ரவுடிகளை போலீசார் கூண்டோடு பிடித்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது தற்போது கைது செய்யப்பட்டுள்ள பெரும்பாலான ரவுடிகளுக்கு அரசியல்வாதிகள் உதவி செய்து வந்ததாக தெரியவந்துள்ளது. பினு உள்பட வெளியில் தலைமறைவாக சுற்றும் மீதியுள்ள 678 ரவுடிகளை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் அந்த ரவுடிகளில் சிலர் அங்கிருந்து தப்பி வந்து புதுச்சேரியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்குள்ள ரௌடிகள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்திருப்பதாக போலீஸ் வட்டாரத்துக்கு தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களை பிடிக்க சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் புதுவை வந்து முகாமிட்டுள்ளனர். புதுவையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.