
சென்னை ஆர் .கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போடியிடும் அதிமுக வேட்பாளர் யார் என்று இன்று அறிவிக்கப்படுவார் என பரபரப்பு தகவல்கள் வெளியான நிலையில், நாளை மறுநாள்தான் அறிவிக்கப்படும் என அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் கடந்த ஏப்ரல் 12 ம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு, ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும், வரும் டிசம்பர் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை இரட்டை இலை சின்னத்துக்காக இரு அதிமுக அணிகளும் சொந்தம் கொண்டாடியதால் அச்சின்னம் முடக்கி வைக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக அம்மா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிட்டனர்.
தற்போது ஓபிஎஸ் , இபிஎஸ் அணிகள் இணைந்து இரட்டை இலை சின்னம் பெற்றப்படடதையடுத்து அவர்கள் இடைத் தேர்தலை சந்திக்கின்றனர்.
இந்நிலையில் அதிமுக சார்பில் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஆட்சிமன்ற குழுக்கூட்டம் நடைபெற்றது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வேட்பாளர் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவார் என எதிர்பார்ககப்பட்டது.
ஆனால் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாளை மறுநாள் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்றும், நாளை மறுநாள் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஏற்கனவே போட்டியிட்ட மதுசூதனன் தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.