
திமுகவுக்கு ஸ்டாலின், அதிமுக சசிகலா அணிக்கு தினகரன், அதிமுக மாற்று அணிக்கு ஓபிஎஸ், மற்றொரு அணிக்கு தீபா என தலைவர்கள் இருந்தாலும் ஆர்.கே நகர் தேர்தல் வெற்றியை நிர்மாணிக்க போகிறவர்கள் வேறு நபர்கள்தான்.
திமுகவை பொறுத்தவரை ஆர்கே நகர் தொகுதியில் செல்வாக்கு பெற்ற நபர் என்றால் அது முன்னாள் அதிமுககாரரான சேகர் பாபு மட்டும்தான்.
முன்பு மாவட்ட செயலாளராக இருந்த பலராமன் ஆக்டிவாக இல்லாத நிலையில் சேகர்பாபு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோரை நம்பிதான் திமுக தலைமை பொறுப்புகளை ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தொகுதியில் செல்வாக்கு பெற்ற பெண் தலைவரான சற்குண பாண்டியன் மறைந்துவிட்டதால் அவரது குடும்பதினர் சிம்லா முத்துசோழனை முன்னிறுத்தியும் தேர்தல் பணிகளை மேற்கொள்வர்.
இது மட்டுமின்றி மீனவர் பகுதிக்கு கே.பி.பி.சாமி, தாயகம் கவி எம்எல்ஏ ஆகியோரும் களமிறக்கப்படுவர்.
திமுகவுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த ஜெயலலிதா தற்போது இல்லாததால் தேர்தல் சித்துவேலைகளில் கரைகண்ட தற்போதைய எம்எல்ஏ சேகர் பாபு மிகுந்த மதிப்பை கூட்டுவார் என நம்பலாம்.
அடுத்து,
அதிமுக சசிகலா அணியயை பொறுத்தவரை ராயபுரம் தொகுதி எம்எல்ஏவும் மீன்வளத்துறை அமைச்சருமான டி.ஜெயக்குமாரையும், அத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று ஜெயலலிதாவுக்காக பதவியையும் துறந்த வெற்றிவேல் ஆகியோரை நம்பி அதிமுகவை வழி நடத்தும் டி.டிவி தினகரனோ அல்லது வெற்றிவேலோ களத்தில் குதிப்பார்கள் என கூறப்படுகிறது.
சேகர் பாபுவுக்கு டஃப் குடுக்க வேண்டுமென்றால் அது ஜெயக்குமார் அல்லது வெற்றிவேலால் மட்டுமே முடியும்.
இது போதாத குறைக்கு ஓபிஎஸ் தரப்பை பொறுத்தவரை அத்தொகுதியில் பழம் தின்று கொட்டை போட்ட மதுசூதனனை நம்பி களமிறங்குவார்கள்.
மதுசூதனனின் சொந்த செல்வாக்கு மற்றும் ஜெயலலிதாவின் வாக்குகள், சசிகலா எதிர்ப்பு ஆகியவை திமுக மற்றும் சசிகலா அணியினருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
இவர்கள் மூன்று பேரை தவிர்த்து ஒன் அண்ட் ஒன்லியாக தொகுதி மக்களின் பாசம் மற்றும் தனது அத்தையின் செல்வாக்கை மட்டுமே நம்பி களத்தில் குதிக்க உள்ளார் ஜெ. அண்ணன் மகள் தீபா.
தேர்தல் சூடு ஆரம்பித்த உடனே ஆர்.கே நகர் தொகுதியில் பேசப்பட்ட பேச்சுகளின் அடிப்படையில் ஜெ.தீபா, மதுசூதனன், டி.ஜெயக்குமார், ஆகியோரை விட சிறிய இடைவெளியில் திமுக வேட்பாளரை இழுத்து கொண்டு சேகர் பாபு முன்னேறி செல்வார் என பரவலாக பேசப்படுகிறது.