
ஆர்.கே.நகரில் இடைத் தேர்தல் களைகட்டியுள்ள நிலையில், இன்று பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
திமுக., சார்பில் போட்டியிடும் மருது கணேஷ், அதிமுக.,வில் இருந்து போட்டியிடும் மதுசூதனன், சுயேட்சையாகப் போட்டியிடும் டிடிவி தினகரன் ஆகியோர், வெள்ளிக்கிழமை இன்று நல்ல நாள் என பார்த்து மனு தாக்கல் செய்தனர்.
வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் போது, தங்கள் சொத்து மதிப்பு விவரங்களை, கணக்குகளையும் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு, மூவருமே தங்கள் சொத்து மதிப்புகளையும் குறிப்பிட்டு, மனுத் தாக்கல் செய்தனர்.
திமுக., சார்பில் போட்டியிடும், 42 வயதாகும் என்.மருது கணேஷ், இன்று தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த சுயவிவரக் குறிப்பில், தான் பிகாம்., எல்எல்பி படித்துள்ளதாகவும், தான் எதிலும் குற்றவாளி இல்லை என்றும், தன் மீது வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அவர் தாக்கல் செய்துள்ள சொத்து மதிப்புப் பட்டியலில், அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் குறித்த விவரங்களை அதில் இணைத்துள்ளார். அதன்படி, மருது கணேஷின் மொத்த சொத்து மதிப்பு - ரூ.12,57,845
. இதில், அசையும் சொத்துக்கள் ரூ.2,57,845
மதிப்பிலும், அசையா சொத்துகள் ரூ.10,00,000 என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதுபோல், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் இணைத்துள்ள படிவத்தில், தனக்கு 75 வயது ஆகிறது என்றும், தன் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,49,53,941 என்றும், அசையும் சொத்து மதிப்பு ரூ.12,53,941 என்றும், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.1,37,00,000 என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எல்லோரையும் விட எப்போதுமே தான் வித்தியாசமானவன் தான் என்று காட்டிக் கொண்டிருக்கும் டிடிவி தினகரன், தன் சொத்து மதிப்புகளைக் காட்டிய விதம்தான் அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. பைசா சுத்தமாக தனது சொத்து மதிப்பைத் துல்லியமாகக் காட்டியிருக்கிறார் தினகரன்.
53 வயதான தினகரன், தான் மேல் நிலைப் பள்ளி படித்ததாகவும், சிவில் எஞ்சினியரிங் படிப்பை பாதியில் விட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், தன் மீதுள்ள பெரா வழக்குகள் குறித்த விவரத்தை இணைத்துள்ள தினகரன், தனக்குள்ள மொத்த சொத்து மதிப்பு - ரூ.74,17,807.94 பைசா என்று குறிப்பிட்டுள்ளார். இதில், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.16,73,799.94 பைசா என்றும், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.57,44,008.00 என்றும் குறிப்பிட்டுள்ளார்.