
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில், கடந்த மாதம் 22, 24, 29 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றுவருகிறது. அதில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள 16 மாநகராட்சிகளில் 14 மாநகராட்சிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. 2 மாநகராட்சிகளில் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல், 198 நகராட்சிகளில் பாஜக 66 நகராட்சிகளில் முன்னிலையில் உள்ளது. பகுஜன் சமாஜ் 40 நகராட்சிகளிலும் சமாஜ்வாதி 28 நகராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளன. சுயேட்சையாக போட்டியிட்ட 4 பேர் நகராட்சி தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாயத்தைப் பொறுத்தவரை, கடைசியாக கிடைத்த தகவலின்படி மொத்தமுள்ள 652ல் பாஜக 278 பஞ்சாயத்துக்களில் முன்னிலையில் உள்ளது. பகுஜன் சமாஜ் 85 மற்றும் சமாஜ்வாதி 53 பஞ்சாயத்துகளில் முன்னிலையில் உள்ளன. 94 பஞ்சாயத்துக்களில் சுயேட்சைகளும் 16 பஞ்சாயத்துக்களில் காங்கிரசும் முன்னிலையில் உள்ளது.
2014 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்த பாஜக, உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலிலும் அமோக வெற்றி அடைந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி, நேரெதிராக படுதோல்வியடைந்துள்ளது.