நாங்களும் தனிப்பெரும் கட்சிதான்..! பீகாரிலும் ஆட்சியை கலைங்க.. பாஜகவை ரவுண்டு கட்டி அடிக்கும் எதிர்க்கட்சிகள்

First Published May 17, 2018, 4:55 PM IST
Highlights
rjd stakes claim to form government in bihar


கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையை பெற்றுள்ள காரணத்தால் பாஜக ஆட்சி கட்டிலில் ஏறியுள்ளதால், கோவாவில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆட்சியமைக்க உரிமை கோருகிறது. அதேபோல், பீகாரிலும் ராஷ்டிரிய ஜனதா தளம் போர்க்கொடி தூக்கியுள்ளது.

கர்நாடகாவில் கடந்த 12ம் தேதி ஆர்.ஆர்.நகர் மற்றும் ஜெயா நகரை தவிர மற்ற 222 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. கடந்த 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சியமைக்க 113 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் பாஜக 104 இடங்களிலும் காங்கிரஸ் 78 இடங்களிலும் மஜத 38 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. இரண்டு இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றிருந்தனர்.

ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் இல்லாத நிலையில், மஜத-விற்கு காங்கிரஸ் ஆதரவளித்ததால் அந்த கூட்டணிக்கு ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை கிடைத்தது. ஆட்சியமைக்க அவர்கள் உரிமை கோரிய நிலையில், தனிப்பெரும் கட்சி என்ற முறையில், பாஜகவும் ஆட்சியமைக்க உரிமை கோரியது. 

கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா, தனிப்பெரும் கட்சி என்ற முறையில் எடியூரப்பாவிற்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். இன்று காலை எடியூரப்பாவிற்கு முதல்வராக பதவி பிரமாணமும் செய்து வைத்தார்.

தனிப்பெரும் கட்சி என்ற முறையில் கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைத்ததால், கோவாவில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற காங்கிரஸ் தான் ஆட்சியமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதை வலியுறுத்தி இன்று மாலை கோவா ஆளுநர் மாளிகையில் அணிவகுப்பு நடத்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் 17, பாஜக 13 இடங்களைக் கைப்பற்றின. தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் இருந்தபோதிலும், மகாராஷ்டிராவாதி கோமந்தக் கட்சி, கோவா பார்வர்டு கட்சி மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் கோவாவில் பாஜக ஆட்சியமைத்தது. மனோகர் பாரிக்கர் முதல்வரானார். இந்நிலையில், கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைத்ததை தொடர்ந்து கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

கோவாவில் காங்கிரஸ் போர்க்கொடி தூக்கியதை அடுத்து பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளமும் போர்க்கொடி தூக்கியுள்ளது. பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளமும் இணைந்து 243 தொகுதிகளில் 178 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியமைத்தது. பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் 80 தொகுதிகளையும் ஐக்கிய ஜனதா தளம் 71 தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி 27 தொகுதிகளையும் கைப்பற்றியது. 

இதையடுத்து அந்த கூட்டணி சார்பில் நிதிஷ் குமார் முதல்வரானார். லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வரானார். கூட்டணியில் இருந்த இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், பாஜகவின் ஆதரவுடன் மீண்டும் முதல்வரானார்.

இந்நிலையில், தற்போது கர்நாடகாவில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாதபோதும், தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள காரணத்தால் பாஜக ஆட்சியை பிடித்திருப்பதால், பீகாரில் ஆட்சியை கலைத்துவிட்டு தனிப்பெரும் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்தை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என அக்கட்சி போர்க்கொடி உயர்த்தியுள்ளது.

ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலுவின் மகன் தேஜஸ்வி, பீகாரில் ஆட்சியை கலைக்குமாறு ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தான் தனிப்பெரும் கட்சி எனக்கூறி ஆட்சியமைக்க உரிமை கோரி கோருகிறது. கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைத்ததை தொடர்ந்து கோவா, பீகாரில் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் இந்திய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 

click me!