பழிவாங்கப்பட்டாரா கமீலா நாசர்? மக்கள் நீதி மய்யத்தை சுழன்றடிக்கும் புயல்..!

By Selva KathirFirst Published Apr 23, 2021, 11:33 AM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் மநீம பொதுச் செயலாளர் அருணாச்சலம் விலகிய நிலையில் தற்போது கமீலா நாசரும் கமல் கட்சிக்கு குட்பை சொல்லியுள்ளார். ஆனால் இந்த விஷயத்தில் கமீலாவை மநீம பழிவாங்கிவிட்டதாக பேச்சுகள் அடிபடுகின்றன.

சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் மநீம பொதுச் செயலாளர் அருணாச்சலம் விலகிய நிலையில் தற்போது கமீலா நாசரும் கமல் கட்சிக்கு குட்பை சொல்லியுள்ளார். ஆனால் இந்த விஷயத்தில் கமீலாவை மநீம பழிவாங்கிவிட்டதாக பேச்சுகள் அடிபடுகின்றன.

மக்கள் நீதி மய்யம் தொடங்கியது முதல் கமலுடன் இருந்து வந்தவர் கமீலா நாசர். மேலும் கட்சியின் பொதுச் செயலாளர் என உயர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தினந்தோறும் கட்சி அலுவலகம் வந்து கட்சிப்பணிகளில் கமீலா ஆர்வமாக ஈடுபட்டு வந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தற்போதுள்ள கட்டமைப்பை வடிவமைத்ததில் கமீலாவுக்கு மிக அதிக பங்குண்டு. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் களம் இறங்கிய  கமீலா பதிவான வாக்குகளில் சுமார் 11 சதவீத வாக்குகளை பெற்று அனைத்து கட்சிகளையும் திரும்பி பார்க்க வைத்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் கமல் கட்சி நகர்பகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்றது. இதனால் பல்வேறு தரப்பில் இருந்தும் கமல் கட்சியை நோக்கி பலர் படையெடுத்தனர். புதியவர்கள் கட்சிக்கு வர வர ஏற்கனவே நிர்வாகிகளாக இருந்த பலர் ஓரங்கட்டப்பட்டனர். மேலும் பண பலம் கொண்டர்கள், செலவு செய்பவர்கள் என வகைப்படுத்தி கட்சியில் பொறுப்புகள் வழங்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள். இதன் பிறகு கமீலாவுக்கு கட்சியில் முக்கியத்துவம் குறையத் தொடங்கியதாக சொல்கிறார்கள். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னையில் 11 சதவீத வாக்குகளை பெற்று கமீலா மற்ற வேட்பாளர்களைவிட முன்னிலை பெற்றது பலரது கண்களையும் உறுத்தியது.

இந்த நிலையில் கட்சியில் புதியவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதையும், துவக்கத்தில் இருந்து இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் குறைக்கப்படுவதையும் உயர்மட்ட கூட்டங்களில் கமீலா வெளிப்படையாக விமர்சித்தாக சொல்கிறார்கள். அதிலும் கட்சியில் கமலுக்கு அடுத்த நிலையில் உள்ள மகேந்திரனின் செயல்பாடுகள் குறித்து கமலிடம் கமீலா புகார் செய்ததாகவும் கூறுகிறார்கள். கமீலாவை போலவே ஏற்கனவே பொதுச் செயலாளராக இருந்த அருணாச்சலமும் கட்சியில் ஓரங்கப்பட்டதால் தான் பாஜகவில் இணைந்தார். இதனை சுட்டிக்காட்டி கட்சிக்கூட்டம் ஒன்றில் வெளிப்படையாக கமீலா பேசியதால் மகேந்திரனின் அதிருப்திக்கு கமீலா ஆளானதாக சொல்கிறார்கள்.

இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட கமீலா ஆர்வம் காட்டினார். ஆனால் கமீலாவுக்கு விருகம்பாக்கத்தை கிடைக்கவிடாமல் செய்ய தியாகராயநகரில் போட்டியிட விரும்பிய ஸ்னேகனை விருகம்பாக்கம் வேட்பாளராக மகேந்திரன் மாற்றியதாக சொல்கிறார்கள். இதனால் அப்போதே கட்சியில் இருந்து விலகுவதாக கமலை சந்தித்து கமீலா கூறியுள்ளார். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கமல் கூறியுள்ளார். இந்த நிலையில் திடீரென கமீலாவை மநீமவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிப்பதாக அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதாவது கட்சியில இருந்து ஒருவர் விலகுவதாக கூறிய நிலையில் அதனை ஏற்காமல் அவரை விலக்கியுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதன் பின்னணியிலும் மகேந்திரன் இருப்பதாகவும், அவர் மீது கமலிடம் கமீலா புகார் அளித்ததால் இப்படி அறிக்கை வெளியிட்டு பழிவாங்கியிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

click me!