ஆளுநருக்கு எதிராக தீர்மானம்.. பாஜகவுக்கு துணையாக வெளியேறிய ஓபிஎஸ்-இபிஎஸ்..? அமைச்சர் பெரிய கருப்பன் மீது பழி.

Published : Apr 25, 2022, 01:51 PM IST
ஆளுநருக்கு எதிராக தீர்மானம்.. பாஜகவுக்கு துணையாக வெளியேறிய ஓபிஎஸ்-இபிஎஸ்..? அமைச்சர் பெரிய கருப்பன் மீது பழி.

சுருக்கம்

பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, அதிமுக சட்டமன்ற உறுப்பினரை அமைச்சர் பெரியகருப்பன் ஒருமையில் பேசியதாக கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, அதிமுக சட்டமன்ற உறுப்பினரை அமைச்சர் பெரியகருப்பன் ஒருமையில் பேசியதாக கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் மீண்டும் அவைக்கு திரும்பிய அவர்கள் அம்மசோதா மீது பேச தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கோரி நிலையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தை ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதிலும் கடந்த நான்கு ஆண்டுகளாக  துணைவேந்தர்கள் ஆளுநரே நியமித்து வருகிறார். இந்நியமனத்தில் மாநில அரசை அவர் கலந்து ஆலோசிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை இனி தமிழக அரசே நியமிக்கும் சட்ட மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. பின்னர்  அம்மசோதா மீதான விவாதம் நடந்தது. அதில் பல்வேறு அரசியல் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்  உரையாற்றினர். 

அப்போது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை அம்மசோதா மீது பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குறுக்கிட்டு பேச முயற்சித்தனர். அப்போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்களை அமரும்படி கூறினார். இதனால் சட்டப்பேரவை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அமைச்சர் பெரியகருப்பன் அதிமுக எம்எல்ஏவை ஒருமையில் பேசி உட்காரு டா..  எனக் கூறியதாக குற்றச்சாட்டை முன்வைத்த அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சர் பெரியகருப்பனை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர். இதற்கு முன்னதாக இத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் வெளிநடப்பு செய்திருந்தனர். இந்நிலையில்தான் அதிமுகவினர் இவ்வாறு கூறினார். 

அப்போது குறுக்கிட்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுகவினர் வெளிநடப்பு செய்வதற்கு காரணம் தேடி காத்திருந்த நிலையில், ஏதோ ஒரு காரணம்காட்டி வெளிநடப்பு செய்கின்றனர். இவர்கள் என்ன ஜனநாயகத்தை கடைப்பிடிக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். இவர்களின் இந்த நடவடிக்கையே இதற்கு எடுத்துக்காட்டு எனக் கூறினார். பின்னர் ஓபிஎஸ்- இபிஎஸ் தலைமையில் வெளிநடப்பு செய்த அதிமுகவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஓ பன்னீர்செல்வம் இன்று சட்டமன்ற நடவடிக்கையில் அதிமுக சார்பாக உறுப்பினர் கோவிந்தசாமி எழுந்து பேச முற்பட்டபோது, அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் மரியாதை குறைவாக ஒருமையில் பேசினார். அதைக் கண்டித்து அதிமுக சார்பாக வெளிநடப்பு செய்துள்ளோம்.

ஆளுநர் அதிகாரத்துக்கு உட்பட்டு தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் கூறினார். பேட்டிக்குப் பின்னர் மீண்டும் அவர்கள் அவைக்கு திரும்பினர், அப்போது மசோதா மீது அமைச்சர் பொன்முடி பேசிக்கொண்டிருந்தார். அப்போது இடையில் குறுக்கிட்ட அதிமுகவினர் இந்த மசோதா குறித்து தங்களது கருத்துக்களை பேச அனுமதிக்க வேண்டுமென கோரினர், சபாநாயகரிடம் அதிமுக கொறடா வேலுமணி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இதை வலியுறுத்தினர். பேச வாய்ப்பு கொடுக்கும்போது வெளியேற்றிவிட்டு, அனைத்தும் முடிந்த பின்னர் வந்து பேச வாய்ப்பு கேட்பது முறையல்ல. எனவே வாய்ப்பு வழங்கப்படாது என சபாநாயகர் திட்டவட்டமாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV
click me!

Recommended Stories

நாடாளுமன்றம் வரை சென்ற திருப்பரங்குன்றம்..! டெல்லியிலும் புயலை கிளப்பும் திமுக!
வளர்ச்சி அரசியலா..? டேஷ் அரசியலா..? மாமதுரையில் நிகழும் அசாதாரண சூழல்.. முதல்வர் பரபரப்பு