
எம்.ஜி.ஆர். சிலைக்கு டிடிவி தினகரன் மாலை அணிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.ஜி.ஆர். சிலை கீற்றுகளால் மூடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா, மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியால், கடந்த ஒன்றாம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் அவரின் குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன், இன்று அனிதாவின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினார். பின்னர், அனிதாவின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்தார்.
முன்னதாக டிடிவி தினகரன், கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பதாக தகவல் பரவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் அமைச்சர் சம்பத்தின் ஆதரவாளர்கள்.
இதனை அடுத்து, எம்.ஜி.ஆர். சிலையை பராமரிப்பு செய்யப்போவதாகவும், அதனால் படிக்கட்டுகளை அகற்றிவிட்டு சிலையைத் துணியால் மூடினர். பின்னர், சிலையை சுற்றி தென்னங்கீற்றுகளால் தடுப்பு அமைத்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர், டிடிவி தினகரன், கலைச்செல்வன் மற்றும் ஆதரவாளர்களைச் சந்தித்துவிட்டு அரியலூர் சென்றார்.