அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா? அண்ணாமலை அப்படி கூறினாரா? பாஜக கொடுத்த பரபரப்பு விளக்கம்.!

By vinoth kumarFirst Published Mar 18, 2023, 8:39 AM IST
Highlights

பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதாக ஆளுங்கட்சியான திமுகவே கூறி வந்த நிலையில் தற்போது அந்த கட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தொண்டர்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். 

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதாக ஆளுங்கட்சியான திமுகவே கூறி வந்த நிலையில் தற்போது அந்த கட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தொண்டர்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு பாஜக ஐடி விங் தலைவர் சிடிஆர் நிர்மல்குமார், திலீப் கண்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவிலும், ஆளுங்கட்சியிலும் இணைந்து வருகின்றனர். 

இதையும் படிங்க;- பால் விலையை உயர்த்திய திமுக அரசு.! உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருப்பது ஏன்.? அண்ணாமலை

இது தொடர்பாக இரு கட்சி தலைவர்களுக்கு இடையே கருத்து மோதல் நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமியை எச்சரிக்கை விடுக்கும் வகையில் அண்ணாமலை கூறியிருந்தார். இதனால், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, பேசிய தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில்;- தமிழக பாஜகவை இதுவரை இல்லாத அளவுக்கு வளர்த்தெடுப்பது என்பது தான் எனது திட்டம். அதற்காகத்தான் நான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கு எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். 

இதையும் படிங்க;-  நான் திரும்பவும் சொல்கிறேன்.. இதெல்லாம் நல்லதுக்கு இல்லை.. பாஜகவை எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.!


தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்குரிய வெற்றி பெறுவதற்குரிய உத்திகள் என்னிடம் உள்ளது. ஒருவேளை தேசிய தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்னால் நான் என் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் என  அண்ணாமலை கூறியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆனால், இதனை பாஜக தரப்பில் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறுகையில்;- அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியதாக வரும் செய்தி தவறானது என விளக்கமளித்துள்ளார்.

click me!