முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும் போது மதுரை தொண்டர்கள் சிறைக்கு செல்ல பயந்தவர்கள் அல்ல. நாங்கள் பல சிறைகளை பார்த்தவர்கள். எங்களிடம் பூச்சாண்டி காட்ட வேண்டாம். இதுபோன்று சர்வாதிகார போக்கு தொடர்ந்தால் மதுரையில் அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக திருப்பூரில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஒட்டிய போஸ்டர் வைரலாகி வருகிறது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் மதுரை வந்தார். அப்போது விமான நிலையத்தில் அவரை, அமமுக நிர்வாகி ராஜேஸ்வரன் வீடியோ எடுத்து 'துரோகத்தின் அடையாளம்' என்று கடுமையாக விமர்சித்தார். இதனால் அப்போது அவரை, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உட்பட சிலர் தாக்கினர் என்று கூறப்படுகிறது.
undefined
இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் ராஜேஸ்வரன் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் எடப்பாடி பழனிசாமி, மணிகண்டன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை கண்டித்து போலீஸ் அனுமதி வாங்காமல், மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே அதிமுகவினர் கடந்த 13ம் தேதி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும் போது மதுரை தொண்டர்கள் சிறைக்கு செல்ல பயந்தவர்கள் அல்ல. நாங்கள் பல சிறைகளை பார்த்தவர்கள். எங்களிடம் பூச்சாண்டி காட்ட வேண்டாம். இதுபோன்று சர்வாதிகார போக்கு தொடர்ந்தால் மதுரையில் அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. கூட்டம் அனுமதியின்றி நடந்ததால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உட்பட 2000 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் அணியினர் ஓட்டியுள்ள போஸ்டர் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், கைது செய் கைது செய், தமிழக அரசே! தமிழக அரசே! மனிதவெடிகுண்டு கலாச்சாரத்தை தூண்டும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ.வை கைது செய். மத்திய அரசே! மத்திய அரசே! உடனே என்ஐஏ புலன் விசாரணையை துவக்கிடு மனித வெடிகுண்டு என பொது மேடையில் முழங்கியவரை தீவிர விசாரணைக்கு உட்படுத்துக என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வி.எம்.சண்முகம், துணை செயலாளர் கனிஷ்கா சிவக்குமார் ஆகியோரின் பெயர்கள் சுவரொட்டியில் இடம் பெற்றுள்ளது.