RepublicDay: வஉசி, வேலுநாச்சியாரை தெரியாது.. குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தியை நிராகரித்த மத்திய அரசு.!

By vinoth kumarFirst Published Jan 17, 2022, 1:17 PM IST
Highlights

தமிழக அரசு சார்பில் குடியரசு தினவிழாவில் இடம் பெறுவதற்காக அலங்கார ஊர்தி மாடல் அனுப்பப்பட்டது. அதில், சுதந்திர போராட்டத் தியாகிகளான கப்பலோட்டிய தமிழகர் வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் தேசிய அளவில் மிகவும் பிரபலமானவர்கள் இல்லை என கூறி மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குடியரசு தின விழா ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி அணிவகுப்பு நடத்தப்படும். இதில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் அந்தந்த மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். இதில் சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களின் போராட்டங்கள் குறித்த சிறப்புகளை கூறும் வகையில் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். இந்த அலங்கார ஊர்திக்காக 36 மாநிலங்கள் மாடல்களை அனுப்பியிருந்தன. அதில் 12 மாநிலங்களின் மாடல்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் குடியரசு தினவிழாவில் இடம் பெறுவதற்காக அலங்கார ஊர்தி மாடல் அனுப்பப்பட்டது. அதில், சுதந்திர போராட்டத் தியாகிகளான கப்பலோட்டிய தமிழகர் வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் தேசிய அளவில் மிகவும் பிரபலமானவர்கள் இல்லை என கூறி மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.

4வது சுற்று வரை சென்ற நிலையில் தமிழக அரசின் அலங்கார வாகனம் நிராகரிக்கப்பட்டுள்ளது. வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியாரை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது. மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும் மத்திய அரசு கூறி நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில் தென்னிந்தியாவில் தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடகா அரசின் அலங்கார ஊர்திக்கு மட்டும் மத்திய அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!