அதிமுகவில் இருந்து என்னை நீக்கியது சந்தோஷம் தான்... முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிரடி..!

By vinoth kumarFirst Published May 24, 2021, 11:44 AM IST
Highlights

மாவட்டச் செயலாளர் வீரமணிக்கு எந்த மனிதாபிமானமும் இல்லை. எனது தாய் இறந்துவிட்டார் என்றுகூட நினைக்காமல் என்னை கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்தார்.

என்னுடைய அம்மா இறப்பு குறித்து அதிமுக மாவட்டச் செயலாளர் கூட விசாரிக்கவில்லை. திமுக மாவட்டச் செயலாளர் விசாரித்தார் என முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியின் தலைவராக இருந்த நிலோபர் கபில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். கடந்த 5 ஆண்டுகள் அமைச்சராக இருந்த நிலோபர் கபிலுக்கு ,நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டது. தேர்தலில் தனக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு வணிகவரித்துறை அமைச்சரும், ஜோலார்பேட்டை தொகுதியின் அதிமுக வேட்பாளருமான கே.சி.வீரமணிதான் காரணம் என நிலோபர் கபில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நிலோபர் கபில் பதவி வகித்தபோது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறையப் பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமல் பணமோசடி செய்ததாக, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் நிலோபர் கபிலின் உதவியாளர் பிரகாசம் கடந்த 3-ம் தேதி புகார் அளித்தார். இதனையடுத்து, அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிலோபர் கபில் நீக்கப்பட்டார். 

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் வாணியம்பாடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- திருப்பத்தூரில் உள்ள 4 தொகுதிகளில் வாணியம்பாடி தொகுதியில் மட்டும் தான் அதிமுக வெற்றி பெற்றது. இந்தத் தொகுதிக்குச் சட்டமன்ற உறுப்பினராகப் பல வேலைகள் செய்திருக்கிறேன். சாலை, குடிநீர் என அனைத்து குறைகளையும் நிறைவேற்றிக் கொடுத்தேன். அதனால்தான் செந்தில்குமார் வெற்றி பெற்றார். அதுவும் 5,000 வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார். இல்லை என்றால் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பார்.

இதனிடையே, சென்னையில் எனது சகோதரியும், தாயாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 15 நாட்களுக்கு முன்பு எனது தாய் இறந்துவிட்டார். சகோதரிக்கு வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காகக் கடந்த 19ஆம் தேதி வாணியம்பாடியில் எனது மகன் நடத்தி வரும் மருத்துவமனையிலிருந்து வென்டிலேட்டர் எடுத்துச் செல்ல வந்திருந்தேன்.

அப்போது, திமுக மாவட்டச் செயலாளர் தேவராஜ் என்னைத் தொடர்பு கொண்டு எனது தாயார் இறப்புக்குத் துக்கம் விசாரித்தார். நான் வாணியம்பாடியில்தான் இருக்கிறேன் என்று கூறியதுடன் உங்களுக்கு நேரில் வாழ்த்து சொல்ல விரும்புகிறேன் என கூறினேன். சென்னை செல்லும் வழியில், பயணியர் விடுதியில் தங்கியிருந்த அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். அவரும் எனது தாயார் இறப்புக்குத் துக்கம் விசாரித்தார். இதில், என்ன தவறு இருக்கிறது. மாவட்டச் செயலாளர் வீரமணிக்கு எந்த மனிதாபிமானமும் இல்லை. எனது தாய் இறந்துவிட்டார் என்றுகூட நினைக்காமல் என்னை கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்தார். என்னை கட்சியில் இருந்து நீக்கியதால் கவலைப்படவில்லை. சந்தோசப்படுகிறேன்.

2016 தேர்தல் நேரத்தில் எனது வெற்றிக்கு பிரகாசம் பக்கபலமாக இருந்தார். அதனால் அவரை அரசியல் உதவியாளராக வைத்துக் கொண்டேன். அவர் பணம் வாங்கியது எல்லாம் எனக்குச் தெரியாது. பிரகாசம் பொய்யான குற்றச்சாட்டைக் கொடுத்திருக்கிறார். என்னுடைய அம்மா இறப்பு குறித்து அதிமுக மாவட்டச் செயலாளர் கூட விசாரிக்கவில்லை. திமுக மாவட்டச் செயலாளர் விசாரித்தார். நான் திமுகவில் சேருகிறேனா இல்லையா? என்பது விரைவில் உங்களுக்குத் தகவல் தெரியும். எந்த கட்சியாக இருந்தாலும் சேவை செய்வதுதான் எனது கடமை என்று நிலோபர் கபில் கூறியுள்ளார்.

click me!