மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! அண்ணன் மு.க.அழகிரி வீட்டிற்கு செல்லாதது ஏன்?

By Selva KathirFirst Published May 24, 2021, 11:04 AM IST
Highlights

திமுக தற்போது கட்டுக்கோப்பாக உள்ளது, மு.க.அழகிரியை நீங்கள் சென்று சந்திக்கும் பட்சத்தில் மறுபடியும் அவர் தன்னை ஒரு பவர் சென்டராக காட்டிக் கொள்ள முயன்றால் சிக்கல் என்றும் ஸ்டாலினுக்கு எடுத்துக கூறப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அண்ணனும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வீட்டிற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி ஒரு நிகழ்வு அரங்கேறவில்லை.

கடந்த ஆண்டு நவம்பர் மாதவாக்கில் மு.க.அழகிரி மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நிச்சயமாக சட்டமன்ற தேர்தலில் தனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்று அவர் தெரிவித்திருந்தார். இதன் மூலம் திமுகவிற்கு எதிராக அழகிரி பிரச்சாரம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அத்தோடு பாஜக பிரமுகர்கள் சிலரும் அழகிரியை மதுரை மற்றும் கொடைக்கானலில் ரகசியமாக சந்தித்து பேசினார்கள். இதனால் அவர் பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் தேர்தல் அறிவிப்பிற்கு பிறகு அழகிரி சைலன்ட் மோடிற்கு சென்றுவிட்டார்.

அழகிரி தான் கூறியது போல் சட்டமன்ற தேர்தலில் எந்த பங்களிப்பையும் அளிக்கவில்லை. வாக்குப்பதிவு நாளன்று நேரில் சென்று வாக்களித்தோடு தனது கடமை முடிந்துவிட்டதாக ஒதுங்கினார் அழகிரி. இந்த நிலையில் தேர்தல் முடிந்து திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானார். இத குறித்து பேசிய அழகிரி, தனது தம்பி முதலமைச்சரான ஒரு அண்ணனாக பெருமையாக கருதுவதாக குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க மு.க.அழகிரிக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டது. அழகிரி விழாவில் பங்கேற்கவில்லை. ஆனால் அவரது மகன் தயாநிதி அழகிரி பதவி ஏற்பு விழாவிற்கு வருகை தந்தார். அவரை உதயநிதி ஸ்டாலின் கட்டி அணைத்து வரவேற்றார்.

இதனை தொடர்ந்து மு.க.அழகிரி – மு.க.ஸ்டாலின் இடையிலான கசப்புணர்வு நீங்கிவிட்டதாக கூறப்பட்டது. மேலும் மதுரை செல்லும் போது ஸ்டாலின் தனது அண்னான அழகிரியை சந்தித்த ஆசி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே, மதுரை சென்ற போது அழகிரியை அவரது டிவிஎஸ் நகர் இல்லத்திற்கு நேரில் சென்று மு.க.ஸ்டாலின் சென்று சந்திப்பார் என்று தகவல்கள் பரவின. ஆனால் மதுரை சென்ற மு.க.ஸ்டாலின் அழகிரி வீட்டிற்கு செல்லாமல் நேராக திருச்சிக்கு திரும்பிவிட்டார். மேலும் முதலமைச்சர் தங்கள் வீட்டிற்கு வருவதாக தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்று அழகிரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முதலமைச்சராக பதவி ஏற்றதும் சென்னையில் உள்ள தனது சகோதரர், சகோதரிகள் வீட்டிற்கு எல்லாம் மு.க.ஸ்டாலின் சென்று வந்தார். அந்த வகையில் தனது அண்ணனான அழகிரி வீட்டிற்கும் ஸ்டாலின் செல்வார் என்றே அனைவரும் நம்பினர். ஆனால் அழகிரி வீட்டிற்கு செல்வது கட்சி, ஆட்சி இரண்டிலுமே குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக ஸ்டாலினுக்கு சிலர் சில விஷயங்களை கூறினர். மதுரையில் திமுக தற்போது கட்டுக்கோப்பாக உள்ளது, மு.க.அழகிரியை நீங்கள் சென்று சந்திக்கும் பட்சத்தில் மறுபடியும் அவர் தன்னை ஒரு பவர் சென்டராக காட்டிக் கொள்ள முயன்றால் சிக்கல் என்றும் ஸ்டாலினுக்கு எடுத்துக கூறப்பட்டுள்ளது.

இது தவிர முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்காவும் மு.க.அழகிரி வீட்டிற்கு தனது கணவர் செல்வதை ஒரு விழுக்காடு கூட விரும்பவில்லை என்கிறார்கள். அதற்கு காரணம் கடந்த 2014ம் ஆண்டு சமயத்தில் கலைஞரை சந்தித்து அழகிரி பேசிய பேச்சுகள் தான் என்று சொல்கிறார்கள். இது போன்ற அரசியல் மற்றும் குடும்ப ரீதியான காரணமாகவே அழகிரியை ஸ்டாலின் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதே சமயம் அழகிரியை இப்படி ஒதுக்கி வைத்திருப்பது நல்லதல்ல என்று குடும்பத்தில் சிலர் தொடர்ந்து ஸ்டாலினிடம் பேசி வருவதாகவும், எனவே இப்போது இல்லை என்றாலும் நிச்சயம் அழகிரி – ஸ்டாலின் சந்திப்பு நடைபெறும் என்கிறார்கள்.

click me!