நேற்று ஒரே நாளில் 12199 சுவரொட்டிகள் அகற்றம்.. போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை. சென்னை மாநகராட்சி அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Jul 10, 2021, 9:36 AM IST
Highlights

 பேருந்து நிழற்குடைகள், மாநகராட்சி கட்டடங்கள், பாலங்கள், தெரு பெயர் பலகைகள் உள்ளிட்ட பொது இடங்களில் ஒட்டப்படும் சுவரொட்டிகளால் மாநகரின் அழகே சீர்க்குலைத்து வருகின்றன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் நேற்று ஒரே நாளில் 12199 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை மாநகரை துாய்மையாக பராமரிக்க சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், திடக்கழிவுகள் அகற்றுதல், சாலை மைய தடுப்புகளில் செடிகள் நட்டு அழகுபடுத்துதல் உள்ளிட்ட பணிகள் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. 

இருப்பினும், பேருந்து நிழற்குடைகள், மாநகராட்சி கட்டடங்கள், பாலங்கள், தெரு பெயர் பலகைகள் உள்ளிட்ட பொது இடங்களில் ஒட்டப்படும் சுவரொட்டிகளால் மாநகரின் அழகே சீர்க்குலைத்து வருகின்றன. இவற்றை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் நேற்று ஒரே நாளில் 12199 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, வடசென்னை பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் 2389 சுவரொட்டிகளும், மத்திய சென்னை பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் 5237 சுவரொட்டிகளும், 

தென் சென்னை பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் 4573 சுவரொட்டிகளும் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து இதே நிலை தொடருமானால், சுவரொட்டிகள் ஒட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தால், அது குறித்து மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும், மாநகராட்சியின் முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
 

click me!