பதிவு செய்த மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவர் மருந்து.. நேரு உள் விளையாட்டு அரங்கில் முதல்வர் தொடங்கி வைத்தார்.

By Ezhilarasan BabuFirst Published May 19, 2021, 12:15 PM IST
Highlights

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனைகள் இணையதளத்தில் பதிவு செய்து ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் விவரங்களை அளித்து ரெம்டெசிவர் மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கான வசதி, tnmsc.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்போது, மருந்து விற்பனை செய்யக்கூடிய இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், அவ்வாறு வழங்கப்படும் மருந்து தவறான முறையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்கவும், மருத்துவமனைகள் மூலமாக அதனை வழங்கிட வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 16-5-2021 அன்று ஆணையிட்டார்கள். 

இதன்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனைகள் இணையதளத்தில் பதிவு செய்து ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் விவரங்களை அளித்து ரெம்டெசிவர் மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கான வசதி, tnmsc.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பதிவு செய்யும் மருத்துவமனைகளுக்கு, சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்களில் இருந்து சில மருந்துகள் வழங்கப்படும். இந்த முறையில் இதுவரை 343 தனியார் மருத்துவமனைகள் பதிவுசெய்துள்ளன. 

இவற்றில் 151 மருத்துவமனைகள் ரெம்டெசிவர் மருந்துக்கான கோரிக்கைகளை நோயாளிகளின் விவரங்களுடன் பதிவு செய்துள்ளன. இவற்றிற்கு இந்த மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. இதனை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்னை ஜவஹர்லால் நேரு  உள் விளையாட்டு அரங்கில் உள்ள விற்பனை மையத்தில் இன்று தொடங்கி வைத்தார்கள். இந்த நிகழ்வில் முதல் கட்டமாக 25 மருத்துவமனைகளுக்கு 960 ரெம்டெசிவர் மருந்து குப்பிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் போது மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். 
 

click me!