மக்கள் நீதி மயத்திலிருந்து விலகியது ஏன்?... கமலுக்கு பொதுச்செயலாளர் முருகானந்தம் எழுதிய பரபரப்பு கடிதம்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 19, 2021, 11:57 AM IST
Highlights

நம்மவர் மீதும், அவரே தான் கட்சி என்பது போல் நடந்து கொள்ளும் அதிகாரம் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். 

சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருகின்றனர். அந்த வரிசையில் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகியது குறித்து பொதுச்செயலாளர் முருகானந்தம் பரபரப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நம்மவர் மீதும், அவரே தான் கட்சி என்பது போல் நடந்து கொள்ளும் அதிகாரம் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். 

இதுகுறித்து முருகானந்தம் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: வணக்கம். மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டமைப்பு மற்றும் சார்பு அணிகளின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்த நான், எனது அனைத்து பொறுப்புகளிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்தும் உடனடியாக ராஜினாமா செய்கிறேன்.

கட்சியில் தற்பொழுது நிலவக்கூடிய ஜனநாயகமற்ற சூழ்நிலையில், நான் இனியும் கட்சியில் தொடர்ந்து நீடிப்பது சரியில்லை என முடிவு செய்துள்ளேன். மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்தது முதல் என் மீது நம்பிக்கை வைத்து வழங்கப்பட்ட அனைத்து பொறுப்புகளையும் நான் திறம்பட செய்து தென்மண்டலம் முழுவதும், குறிப்பாக டெல்டா பகுதிகளிலும், திருச்சி மண்டலத்திலும் நமது கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதற்காக தங்களுக்கும் மற்றும் மக்கள் நீதி மய்ய உறவுகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..

இந்த சூழ்நிலையில், நான் ராஜினாமா செய்வதற்கான காரணத்தையும் வேதனையும், பொது மக்களுக்கு விளக்க கடமைப்பட்டுள்ளவனாக உள்ளேன். கட்சியில் இணைந்த பொழுது எனக்கான சுதந்திரமும், ஜனநாயகமும் கொடுக்கப்பட்டதால் என்னால் முழுவதும் திறம்பட உழைக்க முடிந்தது.

ஆனால் கடந்த சில மாதங்களாக கட்சியில் ஜனநாயகம் முற்றிலும் அற்றுப் போய் விட்டதாக கருதுகிறேன். இது 'நமது கட்சி' (Our Party) என்று என்னைப் போன்ற நிர்வாகிகள் கூறி உழைத்துக் கொண்டிருந்த நிலையில், இல்லை இது 'என் கட்சி' (MY Party) என்ற தோரணையில் நீங்கள் சமீபத்தில் நடந்து முடிந்த உயர்மட்ட நிர்வாக குழு கூட்டத்தில் கூறியதிலும் மற்றும் சில நிகழ்வுகளிலும், பல முடிவுகளிலும் தன்னிச்சையாக செயல்பட்டதன் மூலம் கட்சிக்குள் சர்வாதிகாரம் தலை தூக்கி ஜனநாயகம் காணாமல் போய்விட்டதாக கருதுகிறேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக. கட்சியின் செயல்பாடும் மக்கள் மத்தியில் கட்சிக்கு இருந்த நன்மதிப்பும் சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்திலேயே மிகவும் பலவீனமான கட்சிகளுடன் வைத்துக் கொண்ட மோசமான கூட்டணியால் சுக்கு நூறாகி விட்டது. இதற்கு முழுக்க முழுக்க தலைமை தான் காரணம் என்பதை அனைவரும் அறிவார்கள். மேலும் சட்டமன்ற வேட்பாளருக்கான விருப்ப மனு பெறப்பட்டு. வேட்பாளர்கள் தேர்வுக்கான நேர்காணல் குழு, இரவு பகல் பாராமல் சரியான வேட்பாளர்களை தேர்வு செய்து கொண்டிருக்கும் போது, எந்தவித முன்னறிவிப்புமின்றி, யாரையும் கலந்தாலோசிக்காமல், 100க்கும் மேற்பட்ட சீட்டுகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது எனக்கு மட்டுமல்ல பெரும்பாலான கட்சி தொண்டர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும்  அளித்தது. இந்த ஒரு சம்பவம் தேர்தல் தோல்விக்கு மிக முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

உயர்மட்ட குழு கூட்டத்தில் இது குறித்து நான் உங்களிடம் இந்த கேள்வியை கேட்ட போது, "அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு நமது கட்சியில் ஆள் இல்லை" எனக் கூறிய உங்களது வார்த்தை இன்னும் ரணமாக என்னை உறுத்தி கொண்டிருக்கிறது. கட்சிக்காக இரவு பகல் பாராமல் உழைத்தவர்களும், பல மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் பலரும் இருந்தும் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது இன்னும் மன வேதனைக்கு உள்ளாக்கியது.

சமத்துவமும், சகோதரத்துவமும் கொள்கைகளாக போதித்து வந்த நம் கட்சி, ஒரு நபர் துதி பாடும் கட்சியாக தேர்தல் பிரச்சார மேடைகளில் இருந்தது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் ஆலோசகர்களாக இருக்கக்கூடியவர்கள் உங்களை கட்சியின் இணைப்பிலிருந்து தனிமைப்படுத்தி, தவறு செய்து விட்டனர். நாம் எல்லோரும் தலைவர்கள் என்ற உங்கள் பேச்சு வெறும் பேச்சாகவே போய்விட்டது பிரச்சார மேடைகளில் ஆம் வெறுமனே கைகட்டி உங்கள் ஒற்றை நாற்காலிக்கு பின்னால் என்னை போன்ற நிர்வாகிகள் நின்றுகொண்டிருந்தது. நம் கட்சியில் ஜனநாயகம் மறைந்து.

சர்வாதிகாரம் தலை தூக்கி விட்டது என்பதை காட்டியது நமது கட்சியில் உள்ளவர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் குறிப்பாக சாதாரண பொதுமக்கள் கூட இந்த நிகழ்வை கேலி செய்யக் கூடிய சூழல் உருவானது மிகவும் வேதனைக்கும் வெட்கத்திற்கும் நிகழ்வாகும். உரிய மேலும் என்னை பொறுத்த வரையில் நீங்கள் நமது கட்சியில் தன்னிச்சையாக செயல்படுகிறீர்கள் என்பதும் எந்தத் திறமையும் இல்லாத சாங்கியா சொல்யூஷன்ஸ் சுரேஷ் ஐயர் மற்றும் முன்னாள் டிவி ஊடகத்தை சேர்ந்த மகேந்திரன் ஆகியோரினால் ஆட்டுவிக்க படுகிறீர்கள் என்பது மிகுந்த வேதளைக்குரிய விஷயமாகும்.

சாங்கியா சொல்யூஷன்ஸ் என்பது தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கு நியமிக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆனால் அந்த வேலையை அவர்கள் திறம்பட செய்யாமல் கோட்டை விட்டுவிட்டு, கட்சியினுடைய உள் விவகாரங்களில் தலையிட்டதும் உங்களது ஆலோசகர் உங்களை தவறாக வழிநடத்தியதும் உயர்மட்ட நிர்வாகிகள் எங்களிடம் பிரிவினையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் கட்சிக்காக உண்மையாக பாடுபட்டுக் கொண்டிருக்கும் கட்சித் தொண்டர்களின் மத்தியில் எதிர்மறை எண்ணங்களையும் பிளவையும் ஏற்படுத்தி கட்சியின் தோல்விக்கு வித்திட்டனர்.

இதுபோன்ற அவர்களுடைய திறமையின்மை மற்றும் தவறான அறிவுரைகளால் பல வேதனையான நிகழ்வுகள் இருந்தாலும் கூட அவற்றையெல்லாம் இந்த ராஜினாமா கடிதத்தில் எழுத வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் இது குறித்து பலமுறை உங்களிடம் நேரிலேயே கூறியிருக்கிறேன். கட்சிக்குள் எனக்கு ஏற்பட்ட பல கசப்பான நிகழ்வுகளை தங்களின் கவனத்திற்கு கொண்டு வந்த போதும் அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. குறைந்தபட்சம் உயர்மட்ட நிர்வாக குழு கூட்டத்தில் நான் கேட்ட கேள்விகளுக்கு உங்களிடம் இருந்து பதில் எதிர்பார்த்து ஏமாந்து போனேன். இன்றுவரை அவை பதில் இல்லா கேள்விகளாகவே உள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக எங்களது கடந்த கால சிறப்பான செயல்பாடுகள் எவற்றையுமே நினைத்துப் பார்க்காமல் உயர் மட்ட நிர்வாக குழு கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கான காரணம் என்ன, இனிவரும் நாட்களில் கட்சியை எப்படி வளர்ப்பது என்பதை ஆராய்ந்து தேர்தல் தோல்விக்கு தார்மீசு பொறுப்பை கூட நீங்கள் ஏற்காமல் எங்களை பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்யச் சொன்ன அந்த கணமே சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டதாகவே கருதுகிறேன்.

அதனால் இனியும் இந்த கட்சியில் தொடர்வதை விட வெளியேறுவது மேல் எனக் கருதி எனது பொறுப்பில் இருந்தும் மக்கள்நீதி மய்யம் கட்சியில் இருந்தும் உடனடியாக ராஜினாமா செய்கிறேன். நீங்கள் எதிர்பார்த்தது போலவே தற்பொழுது கட்சியில் நேர்மையானவர்களும், திறமையானவர்களும் வெளியேறிவிட்டனர். ஏற்கனவே நான் செய்து வந்த மக்கள் சேவையை மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூலமாக சிறிது காலம் செய்ய வாய்பளித்ததற்கு நன்றி. எப்பொழுதும், எந்த சூழ்நிலையிலும் நேர்மையானவனாகவே எனது சமூக பணியை தொடர்வேன் என தெரிவித்துள்ளார். 
 

click me!