
நாடு முழுவதும் சீர்திருத்தத் திருமணங்கள் நடைபெறும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவர திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட முதல்வர் இவ்வாறு கூறினார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிக்கப்பட்டு வருகிறது. அவை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ஆட்சிக்கு வந்தது முதல் பெண்களுக்கான திட்டங்களை முதலமைச்சர் அடுத்தடுத்து அறிமுகப்படுத்தி வருகிறார். பேருந்தில் இலவச பயணம், உள்ளாட்சி மன்ற தேர்தலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு, நடந்து முடிந்த நகராட்சி மன்றத் தேர்தலில் மாநகராட்சி மேயர்களாக 11 பெண்கள் என பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக உறுதி செய்துகாட்டியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்நிலையில்தான் நாடு முழுவதும் திருமணங்கள் சாதி ஏற்றதாழ்வு அற்ற சடங்களுகள் அற்ற சீர் திருத்த திருமணங்களாக நடைபெற வேண்டும் என தனது அவாவை வெளிப்படுத்தியுள்ளார்.
சீர்திருத்த திருமணம்:
எப்போதும் எதிலும் இந்தியாவுக்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழகமே திகழ்ந்து வருகிறது. அது சாதி ஒழிப்பாக இருந்தாலும் சரி, சமூக சீர்திருத்தமாக இருந்தாலும் சரி,முன்னணியில் இருப்பது தமிழகம்தான். அதில் மிக முக்கியமானது சுயமரியாதை திருமணம், சாதி அடையாளர்களை ஒழித்து சமூகத்தில் சமத்துவத்தை துளிர்விட வைத்தவை சீர்திருத்த திருமணங்கள் என்றே கூறலாம். சீர்திருத்த திருமணங்கள் சுயமரியாதை திருமணங்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது தெய்வீக சம்மந்தம், சடங்கு, இயற்கை தத்துவத்திற்கு முரணான வேதங்கள் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு நடைபெறும் திருமணங்களே சுயமரியாதைத் திருமணங்கள் ஆகும். அதாவது பார்ப்பன புரோகிதர் இல்லாத அர்த்தமற்ற அத்தியாவசிய சடங்குகள் இல்லாத, வீண் செலவு இல்லாத, கலப்பு மணங்களும், விதவை மறுமணங்களும், சாதி மறுப்பு திருமணங்களுமே சீர்திருத்த திருமணங்கள் என கூறப்படுகிறது.
விதை போட்ட திராவிட இயக்கம்:
திராவிட இயக்கம் தமிழகத்தில் வேறொன்று தொடங்கியதிலிருந்து சீர்திருத்த திருமணங்கள் நடைமுறையில் இருந்து வருகிறது. மொத்தத்தில் சாஸ்த்திரங்கள், நேர கால சாதகங்கள் பார்க்காமல் சடங்குகளுக்கு முக்கியத்துவம் தராமல், ஆடம்பரம் இல்லாமல், தமிழ் மொழியில் நடத்தப்படும் திருமணங்களே சீர்திருத்த திருமணம், சுயமரியாதைத் திருமணம் ஆகும். ஒரு காலத்தில் இந்து மதத்தில் மணமக்கள் ஒருவருக்கொருவர் பார்க்காமல், பேசிக் கொள்ளாமல் மணமக்களின் பெற்றோர்களால் மட்டுமே முடிவு செய்யப்பட்டு திருமணம் நடைபெற்று வந்த நிலையில், ஆனால் தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் நேரில் சந்தித்து பின்னர் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் முடிவெடுத்து திருமணங்கள் நடக்க தொடங்கியது அதற்கு விதை போட்டதும் சீர்த்திருத்த திருமணமே ஆகும். 1955ஆம் ஆண்டில் இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்து திருமணச் சட்டத்தில் ஒரு திருத்தமாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா அவர்கள் இதற்கான மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். சட்டமன்ற விவாதத்திற்குப் பின்னர் நிறைவேற்றப்பட்டது இது இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு 1968 குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று இது தமிழக அரசியலில் சட்டமாக்க வடிவமைக்கப்பட்டது.
திமுக எம்பிக்களுக்க ஸ்டாலின் உத்தரவு:
இந்நிலையில்தான் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் மகேந்திரன் மற்றும் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசியதுடன், சீர்திருத்த திருமணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார். இந்த திருமணம் சீர்திருத்த திருமணமாக நடைபெற்றதால் திருமணத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி என கூறிய அவர், இதை சீர்திருத்த திருமணம் என கூறுவதை விட திராவிட திருமணம் எனக் கூறலாம் என்றார். 1962ல் அண்ணா ஆட்சி அமைத்தவுடன் சட்டத்திருத்தம் கொண்டு வந்தார். கலைஞர் இந்தியா முழுவதும் இந்த சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். எனவே திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா முழுவதும் சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் வகையில் சட்டத் திருத்தத்தை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.