பாஜக வழியில் செல்லுங்கள்.. முதல்வர் ஸ்டாலினை நெருக்கும் ஓபிஎஸ்..!

By vinoth kumar  |  First Published Nov 5, 2021, 5:09 PM IST

திமுக தனது தேர்தல்‌ அறிக்கையில்‌, திமுக ஆட்சிக்கு வந்தால்‌ பெட்ரோல்‌ விலை லிட்டருக்கு 5 ரூபாயும்‌, டீசல்‌ விலை லிட்டருக்கு 4 ரூபாயும்‌ குறைக்கப்படும்‌ என்ற வாக்குறுதியை அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல்‌ மீதான வரியை லிட்டருக்கு 3 ரூபாய் மட்டும்‌ குறைத்தது. டீசல்‌ மீதான வரியைக் குறைக்கவேயில்லை. 


பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரி குறைப்பு குறித்து தமிழக அரசு மவுனம்‌ சாதித்து வருவது தமிழ்நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என  ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- நாட்டின்‌ பொருளாதார வளர்ச்சிக்கு அச்சாணியாக விளங்கும்‌ டீசலின்‌ விலை லிட்டருக்கு 100 ரூபாயையும்‌ தாண்டி உயர்ந்துகொண்டே போவதைச்‌ சுட்டிக்காட்டி, இதன்‌ காரணமாக அத்தியாவசியப்‌ பொருட்களான அரிசி, பருப்பு வகைகள்‌, எண்ணெய்‌ வகைகள்‌, இதர மளிகைப்‌ பொருட்கள்‌, காய்கறிகள்‌, பழங்கள்‌, பூக்கள்‌ ஆகியவற்றின்‌ விலை கட்டுக்கடங்காமல்‌ செல்வதையும்‌, வாடகை வாகனங்களில்‌ பயணிக்கும்‌ மாணவ, மாணவியர்‌, அலுவலகங்களுக்குச்‌ செல்வோர்‌, சுற்றுலாப்‌ பயணிகள்‌, விவசாயிகள்‌, தொழில்‌முனைவோர்கள்‌ பாதிக்கப்படுவதையும்‌ குறிப்பிட்டு, டீசல்‌ விலையை மாநில அரசின்‌ சார்பில்‌ ஓரளவு குறைக்கவும்‌, எண்ணெய்‌ நிறுவனங்களுக்கு வரும்‌ லாபத்தில்‌ ஒரு பகுதியை விட்டுத்‌ தருவது மற்றும்‌ மத்திய அரசின்‌ கலால்‌ வரியை ஓரளவு குறைப்பது குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம்‌ தரவும்‌ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு முதல்வருக்கு எனது 19-10-2021 அறிக்கை வாயிலாக வேண்டுகோள்‌ விடுத்திருந்தேன்‌.

Latest Videos

03-11-2021 நாளைய நிலவரப்படி தமிழ்நாட்டில்‌ ஒரு லிட்டர்‌ பெட்ரோல்‌ 106 ரூபாய்‌ 76 காசுக்கும்‌, டீசல்‌ 102 ரூபாய்‌ 69 காசுக்கும்‌ விற்பனை செய்யப்பட்டு வந்தது. நாட்டில்‌ உள்ள பல்வேறு மாநிலங்களில்‌ பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ விலை 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டதன்‌ விளைவாக விலைவாசி உயர்ந்து மக்கள்‌ ஆற்றொணாத்‌ துயரத்திற்கு ஆளாகி வந்ததோடு அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ மட்டுமல்லாமல்‌ கட்டுமானப்‌ பொருட்களின்‌ விலைகளும்‌ கட்டுக்கடங்காமல்‌ சென்று கொண்டிருந்தன.

இந்தச்‌ சூழ்நிலையில்‌, விலைவாசியைக்‌ கட்டுப்படுத்தும்‌ வகையிலும்‌, கொரோனா தொற்று குறைந்துள்ளதையடுத்து வேளாண்மைத் துறை, உற்பத்தித்‌ துறை மற்றும்‌ சேவைத்‌ துறை ஆகியவற்றின்‌ செயல்பாடுகளில்‌ குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம்‌ ஏற்பட்டுள்ள நிலையில்‌ இந்தியப்‌ பொருளாதாரத்தை மேலும்‌ ஊக்கப்படுத்தும்‌ வகையிலும்‌, தீபாவளிப்‌ பண்டிகை முதல்‌, அதாவது 04-11-2021 முதல்‌ பெட்ரோல்‌ மீதான கலால்‌ வரியை லிட்டருக்கு 5 ரூபாய்‌ குறைத்தும்‌, டீசல்‌ மீதான கலால்‌ வரியை லிட்டருக்கு 10 ரூபாய்‌ குறைத்தும்‌ மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதன் மூலம்‌, சென்னையில்‌ ஒரு லிட்டர்‌ பெட்ரோல்‌ விலை 101 ரூபாய்‌ 40 காசுக்கும்‌, டீசல்‌ விலை 91 ரூபாய்‌ 43 காசுக்கும்‌ விற்பனை செய்யப்படுகிறது. இது உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஒன்றாகும்‌.

இதனைத்‌ தொடர்ந்து, அசாம்‌, கோவா, குஜராத்‌, ஹரியாணா, கர்நாடகா, திரிபுரா, மணிப்பூர்‌, சிக்கிம்‌ மற்றும்‌ புதுச்சேரி ஆகிய மாநிலங்கள்‌ பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரியை 7 ரூபாய் குறைத்துள்ளன. இதன் மூலம்‌ மேற்படி மாநிலங்களில்‌ டீசல்‌ விலை 17 ரூபாயும்‌, பெட்ரோல்‌ விலை 12 ரூபாயும்‌ குறைந்துள்ளது. இது தவிர, உத்தரகாண்ட்‌ மாநிலம்‌ பெட்ரோல்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரியை 2 ரூபாயும்‌, டீசல்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரியை 7 ரூபாயும்‌ குறைத்துள்ளது. பிஹாரில்‌ பெட்ரோல்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரி 3 ரூபாய்‌ 20 காசும்‌, டீசல்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரி 3 ரூபாய்‌ 90 காசும்‌ குறைக்கப்பட்டுள்ளது. அருணாச்சாலப் பிரதேசத்தில்‌ பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரி 5 ரூபாய்‌ 20 காசாகக் குறைக்கப்பட்டுள்ளது. மத்தியப்‌ பிரதேசத்தில்‌ பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரி 4 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.

பிராந்தியக்‌ கட்சி ஆளும்‌ மாநிலமான ஒடிசாவில்‌ பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரி 3 ரூபாய்‌ குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில்‌ பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரி குறைப்பு குறித்து தமிழ்நாடு அரசு மவுனம்‌ சாதித்து வருவது தமிழ்நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தனது தேர்தல்‌ அறிக்கையில்‌, திமுக ஆட்சிக்கு வந்தால்‌ பெட்ரோல்‌ விலை லிட்டருக்கு 5 ரூபாயும்‌, டீசல்‌ விலை லிட்டருக்கு 4 ரூபாயும்‌ குறைக்கப்படும்‌ என்ற வாக்குறுதியை அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல்‌ மீதான வரியை லிட்டருக்கு 3 ரூபாய் மட்டும்‌ குறைத்தது. டீசல்‌ மீதான வரியைக் குறைக்கவேயில்லை. தற்போது மத்திய அரசு பெட்ரோல்‌ மீதான கலால்‌ வரியை 5 ரூபாயும்‌, டீசல்‌ மீதான கலால்‌ வரியை 10 ரூபாயும்‌ குறைத்துள்ள நிலையில்‌, இதன்‌ தொடர்ச்சியாக புதுச்சேரி உட்பட இந்தியாவில்‌ உள்ள பெரும்பாலான மாநிலங்கள்‌ பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ விலையைக் கணிசமாகக் குறைத்துள்ள நிலையில்‌, அதனைப்‌ பின்பற்றி தமிழ்நாடு அரசும்‌ பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரியை லிட்டருக்கு 7 ரூபாய்‌ குறைக்க வேண்டும்‌ என்ற எதிர்பார்ப்பு மக்கள்‌ மத்தியில்‌ பரவலாக எழுந்துள்ளது.

அப்பொழுதுதான்‌ தமிழ்நாட்டில்‌ அத்தியாவசியப்‌ பொருட்கள்‌, கட்டுமானப்‌ பொருட்கள்‌, வாகன வாடகை ஆகியவை பிற மாநிலங்களுக்குச் சமமாகக் குறைய வாய்ப்பிருக்கும்‌ என்றும்‌, இல்லையெனில்‌, கூடுதல்‌ சுமையைச் சுமக்கக்கூடிய நிலைக்குத் தமிழ்நாட்டு மக்கள்‌ தள்ளப்படுவார்கள்‌ என்றும்‌ கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல்‌, புதுச்சேரியை ஒட்டியுள்ள மாவட்டங்களைச்‌ சேர்ந்தவர்கள்‌, தமிழ்நாட்டில்‌ எரிபொருளை நிரப்புவதற்கு பதிலாக புதுச்சேரியில்‌ நிரப்பக்கூடிய சூழ்நிலை உருவாகி அதன் மூலம்‌ தமிழ்நாட்டிற்கு வரும்‌ வருவாயும்‌ குறையும்‌ நிலை ஏற்படும்‌.

பிற மாநிலங்களுக்கு இணையாக பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரி லிட்டருக்கு 7 ரூபாய்‌ குறைக்கப்பட வேண்டும்‌ என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாட்டு மக்களிடைய மேலோங்கி இருந்தாலும்‌, திமுகவின்‌ தேர்தல்‌ வாக்குறுதியான பெட்ரோல்‌ விலை லிட்டருக்கு 5 ரூபாய்‌, டீசல்‌ விலை லிட்டருக்கு 4 ரூபாய்‌ குறைக்கப்படும்‌ என்பதற்கேற்ப, ஏற்கெனவே பெட்ரோல்‌ விலை லிட்டருக்கு 3 ரூபாய்‌ குறைக்கப்பட்ட நிலையில்‌, குறைந்தபட்சம்‌ பெட்ரோல்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரியை லிட்டருக்கு 2 ரூபாயும்‌, டீசல்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரியை லிட்டருக்கு 4 ரூபாயும்‌ குறைக்க திமுக அரசு கண்டிப்பாக முன்‌வர வேண்டும்‌ என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இவ்வாறு குறைக்கப்படும்‌ பட்சத்தில்‌, ஒரு லிட்டர்‌ பெட்ரோல்‌ விலை 99 ரூபாய்‌ 40 காசுக்கும்‌, டீசல்‌ விலை 87 ரூபாய்‌ 43 காசுக்கும்‌ விற்பனையாகும்‌ சூழ்நிலை ஏற்படும்‌.

இதன் மூலம்‌ அத்தியாவசியப்‌ பொருட்களின்‌ விலை‌ கணிசமாகக் குறையும்‌ நிலை ஏற்படும்‌. எனவே, நாட்டின்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டும்‌, அனைத்துத்‌ தரப்பு மக்களின்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டும்‌, தமிழ்நாடு முதல்வர் இதில்‌ உடனடியாகத்‌ தலையிட்டு, பெரும்பாலான மாநிலங்களில்‌ பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரி லிட்டருக்கு 7 ரூபாய்‌ குறைக்கப்பட்டதைப்‌ போல்‌ குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்றும்‌, குறைந்தபட்சம்‌ தேர்தல்‌ வாக்குறுதியினை நிறைவேற்றும்‌ வகையிலாவது பெட்ரோல்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரியை லிட்டருக்கு 2 ரூபாய்‌ குறைக்கவும்‌, டீசல்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரியினை லிட்டருக்கு 4 ரூபாய்‌ குறைக்கவும்‌ வழிவகை செய்ய வேண்டும்‌ என்று வலியுறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

click me!