இந்துக்களை காயப்படுத்துவதில் குறியாக இருக்கிறார் ஸ்டாலின்.. முதல்வரை மொத்தமாக டேமேஜ் செய்த வி.பி துரைசாமி.

By Ezhilarasan BabuFirst Published Nov 5, 2021, 3:47 PM IST
Highlights

ஒரு முதலமைச்சர் ஒரு சார்பாக நடந்து கொள்வது கூடாது, ஒரு சார்பாக நடந்து கொள்வது திமுகவின் வாடிக்கையாக இருந்து வருகிறது. தொடர்ந்து இந்து மக்களின் உணர்வை காயப்படுத்துவதாக முதல்வரின் நடவடிக்கைகள் உள்ளது.

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நடந்து கொள்கிறார் என்றும், ஒரு சார்பாக நடந்துகொள்வது திமுகாவின் வாடிக்கை என்றும் பாஜகவின் மாநில துணைத் தலைவர் வி.பி துரைசாமி விமர்சித்துள்ளார். தீபாவளி பண்டிகைக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவிக்காதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டுள்ளது. எங்கெல்லாம் இந்து மக்கள் பரவிக் கிடக்கிறார்களோ அந்த நாடுகளில் எல்லாம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தீபாவளி பண்டிகை அமெரிக்க வெள்ளை மாளிகையில் கொண்டாடப்பட்டுள்ளது, அதிபர் ஜோ பிடன் தன் மனைவியுடன் வெள்ளை மாளிகையில் குத்துவிளக்கேற்றி கொண்டாடினார். இதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இதுபோல இன்னும் பல நாடுகளில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்ததால் தீபாவளி களையிழந்து காணப்பட்டது, ஆனால் தற்போது கொரோனா தோற்று படிப்படியாக குறைந்து வருவதால், அதிகளவில் பட்டாசுகள் வெடித்து இந்தாண்டு உற்சாகம் பொங்க தீபாவளி கொண்டாடப்பட்டுள்ளது.

இந்தாண்டு பிரதமர் மோடி முதல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தீபாவளி வாழ்த்து கூறினர், ஆனால் தமிழகத்தை ஆளும் முதலமைச்சர் ஸ்டாலின், அவரது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சிலரும் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லவில்லை. இதை சமூக ஊடகங்களில் பாஜகவினரும், பல இந்து அமைப்பினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன்,  தீபாவளி பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து சொல்ல வேண்டும், ஆனால் சொன்னாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அவருக்கு ஏன் இந்த தயக்கம் இருக்கிறது மற்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது போல இந்துக்களின் பண்டிகைக்கும் அவர் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். ஆனாலும் அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து கூறவில்லை. இதுகுறித்து ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விளக்கம் அளித்திருந்த  திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்  ஆ. ராசா, உலகில் உள்ள அனைத்து மதங்களிலும் மூட நம்பிக்கை உள்ளது. 

பௌத்தம், சமணம், ஆசிவகம் தவிர மற்ற எல்லா மதங்களும் உலகை கடவுள்தான் தோற்றுவித்தார் என்று சொல்கின்றன, இயற்கையாக உள்ளவற்றை கடவுள்தான் படைத்தார் எனக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மூட நம்பிக்கை இந்து மதத்தில் மட்டுமல்ல, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமியத்திலும் உள்ளது. அதனையும் நாம்  ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால் இயேசு கிறிஸ்து தோன்றியதற்கும், முகமது நபி அவர்கள் தோன்றியதற்கும் வரலாற்று ஆதாரம் உள்ளது. அவர்கள் கூறிய போதனைகள் மெய்யா பொய்யா என்பதையும் கடந்து, அவர்கள் இருவரும் பிறந்ததற்கான ஆவணம் உலகில் உள்ளது. இது வரலாற்று நிகழ்வு, அவர்களின் மார்க்கத்தை வழிமொழியும் மக்களுக்கு வாழ்த்து கூறுவது  என்பது ஒருவித மனிதநேயம், ஆனால் இந்துக்களுக்கு எதனை ஆதாரமாகக் கொண்டு வாழ்த்து சொல்ல முடியும், பத்மாசுரன் என்ற அசுரன் அதாவது திராவிடர்களை அழிப்பதற்காக தேவர்கலான பிராமணர்கள் நடத்திய  போராட்டம், நரகாசுரன் தேவர்களுக்கு பிராமணர்களுக்கு எதிராக இருந்ததால் அவனை வதம் செய்து எரித்தார்கள் என்று கூறப்படுகிறது, இது தீபாவளியாக கொண்டாடுகிறார்கள்.அதற்கு கூறும் பல காரணங்கள் அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் ஒவ்வாத வகையில் இருப்பதால் நாம் தீபாவளியை ஏற்கவில்லை என அவர் விளக்கம் அளித்திருந்தார். 

இதே நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தீபாவளிக்கு வாழ்த்து கூறாதது  பேசுபோருளாக மாறியுள்ளது.  இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில்  பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி. துரைசாமி, பாஜக பொதுச் செயலாளர் கரு நாகராஜன் ஆகியோர் கோயிலில் வழிபட்டனர். பின்னர் கேதார்நாத்தில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட ஆன்மீக பயணத்தை நேரில் கண்டு களித்தனர். அதனையடுத்தி செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி துரைசாமி, தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்காத முதலமைச்சரை கடுமையாக விமர்சித்தார். 

அவர் செய்தியாளர்களிடம் பேசியது பின்வருமாறு:- தமிழக பாரதிய ஜனதா கட்சி எப்போதும் இந்து மதத்தின் மேம்பாட்டிற்காகவும், இந்து மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிற ஒரு மாபெரும் இயக்கம் ஆகும். இந்து மதத்துக்காக காலம் காலமாக பாஜக போராடிக் கொண்டிருக்கிறது எண்ணி பெருமை கொள்கிறோம் என்றார். அப்போதே தீபாவளி பண்டிகைக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து கூறாதது குறித்து செய்தியாளர்கள் எழிப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நடந்துகொள்கிறார்.

ஒரு முதலமைச்சர் ஒரு சார்பாக நடந்து கொள்வது கூடாது, ஒரு சார்பாக நடந்து கொள்வது திமுகவின் வாடிக்கையாக இருந்து வருகிறது. தொடர்ந்து இந்து மக்களின் உணர்வை காயப்படுத்துவதாக முதல்வரின் நடவடிக்கைகள் உள்ளது. அவர் தொடர்ந்து இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதை தவிர்த்து வருகிறார். திமுக முன்னாள் முதல்வர் கலைஞரை காட்டிலும் அதிகப்படியாக தற்போதய முதல்வர் ஸ்டாலின் இந்து மக்களின் உணர்வுகளை காயப்படுத்துகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் இறையாண்மைக்கு எதிராக நடந்து கொள்கிறார் என விமர்சித்த அவர், அதன் ஒரு பகுதியாகத்தான் கோயில் நகைகளை உருக்குவதற்கு அவர் உத்தரவிட்டிருக்கிறார் என்றார். திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பாஜக தொடர்ந்து முதல்வரையும், அவரின் உத்தரவுகளையும் விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது. அந்த வகையில் தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் தீபாவளிக்கு வாழ்த்து கூறாததையும் பாஜக அரசியலாக்கி வருவது குறிப்பிடதக்கது. 
 

click me!