தினகரனை ஓ.பி.எஸ் கடந்த ஆண்டு சந்தித்தது ஏன்? அசரவைக்கும் அரசியல் காரணம்!

By sathish kFirst Published Oct 6, 2018, 9:57 AM IST
Highlights

கடந்த ஆண்டு சசிகலா குடும்பத்திற்கு எதிரான தர்மயுத்தம் நடத்திக் கொண்டே தினகரனை ஓ.பி.எஸ் சந்தித்தது ஏன் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சராக சசிகலா பதவி ஏற்பதற்கான முயற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென ஓ.பி.எஸ் ஜெயலலிதா சமாதியில் இருந்து கடந்த ஆண்டு தர்மயுத்தத்தை தொடங்கினார். சசிகலா குடும்பத்திடம் இருந்து அ.தி.மு.கவை மீட்கப்போவதாக அறிவித்து தனது ஆதரவாளர்களை வைத்துக் கொண்டு அவ்வப்போது போராட்டம், பொதுக்கூட்டம் என்றெல்லாம் ஓ.பி.எஸ் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
   
இந்த சமயத்தில் ஈ.பி.எஸ் – தினகரன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தினகரனை அ.தி.மு.கவில் இருந்து ஒதுக்கி வைப்பதாக ஈ.பி.எஸ் அணியும் அறிவித்தது. இதனை தொடர்ந்து ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் அணிகளை இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் அமைச்சரவையில் இடம் ஒதுக்கீடு, கட்சிப் பதவிகளை பிரித்துக் கொள்வதில் இழுபறி நீடித்துக் கொண்டிருக்கிறது. திரைமறைவில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தது.


   
ஆனால் முதலமைச்சர் பதவியை முதலில் ஓ.பி.எஸ் கேட்டதாகவும் அதற்கு ஈ.பி.எஸ் மறுத்துவிட்டதாகவும் அப்போது தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து துணை முதலமைச்சர் பதவியாவது வேண்டும் என்று ஓ.பி.எஸ் தரப்பு பேச்சுவார்த்தையை முன்னெடுத்த நிலையில் அதற்கும் எடப்பாடி தரப்பு உடன்படாத சூழல் நிலவியது. இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு ஜுலை மாதம் தினகரன் – ஓ.பி.எஸ் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
   
அதாவது ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் அணிகள் இணைப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்தது. அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக அதாவது ஜுலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்று ஓ.பி.எஸ் தரப்புக்கு நெருக்கமானவர்கள் கசியவிட்டுள்ளனர். அதாவது எடப்பாடி அணியுடனான பேச்சுவார்த்தையின் போது ஓ.பி.எஸ் தரப்புக்கு மிகுந்த பின்னடைவு ஏற்பட்டதாகவும், அந்த பின்னடைவை சரி செய்ய தினகரனுடனான சந்திப்பை ஓ.பி.எஸ் பயன்படுத்திக் கொண்டதாகவும் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.


   
அதாவது கட்சியிலும் சரி ஆட்சியிலும் சரி முக்கிய பதவிகள் எதுவும் தர முடியாது என்று ஈ.பி.எஸ் தரப்பு மறுத்துள்ளது. அந்த சமயத்தில் தினகரனுக்கு ஆதரவாக கணிசமான எண்ணிக்கையில் எம்.எல்.ஏக்கள் அணிவகுத்தனர். மேலும் ஓ.பி.எஸ் தரப்பிலும் கணிசமான எண்ணிக்கையில் எம்.எல்.ஏக்கள் இருந்தனர். ஓ.பி.எஸ் – தினகரன் இணைந்தால் எடப்பாடி பழனிசாமி அரசு கவிழ்ந்துவிடக்கூடிய சூழல் இருந்தது.
   
இந்த சூழலை பயன்படுத்தி எடப்பாடி தரப்பை பணிய வைக்கவே தினகரனை ஓ.பி.எஸ் சந்தித்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். மேலும் தினகரனை சந்தித்துவிட்டு வந்த அதே ஜுலை 12ந் தேதி தான் அ.தி.மு.கவில் எடப்பாடி பழனிசாமி அணியுடனான இணைப்புக்கு அமைக்கப்பட்ட குழுவை ஓ.பி.எஸ் கலைத்தார். அதாவது தினகரனை ஓ.பி.எஸ் சந்தித்த தகவல் நிச்சயம் ஈ.பி.எஸ் தரப்புக்கு சென்று விடும். இருவரும் சேர்ந்துவிட்டால் நமக்கு ஆபத்து என்பதால் துணை முதலமைச்சர் என்கிற கோரிக்கையை ஏற்று எடப்பாடி தரப்பு இறங்கி வந்தததாகவும் ஓ.பி.எஸ் தரப்பு தெரிவிக்கிறது. 
   
அதாவது எடப்பாடி பழனிசாமி தரப்பை நெருக்கடிக்கு ஆளாக்கி காரியம் சாதித்துக் கொள்ளவே அண்ணன் ஓ.பி.எஸ்சை சந்தித்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

click me!