
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் மட்டுமின்றி எந்த தேர்தலையும் சந்திக்க தே.மு.தி.க. தயாராக இருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் கூட்டணி யாருடன் அமைப்பது என்பது குறித்தும் பல்வேறு ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
திமுக வுக்கு காங்கிரஸ் கட்சியும், முஸ்லீம் லீக் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன. சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி, தீபா அணி ஆகியோர் தனித்து போட்டியிடுவதாக தெரிகிறது.
இந்நிலையில், சென்னையில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதலமைச்சர் இல்லை என்பதால், தமிழகத்தில் விரைவில் மீண்டும் தேர்தல் வரும்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் மட்டுமின்றி எந்த தேர்தலையும் சந்திக்க தே.மு.தி.க. தயாராக இருக்கிறது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல், தேர்தல்களிலும் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.