இந்தியா கூட்டணியில் மேற்கு வங்காளம், கேரளாவில் கூட்டணி சேரமாட்டோம் என்று கம்யூனிஸ்ட் சொல்கிறது. டெல்லி, பஞ்சாப், குஜராத்தில் ஆம் ஆத்மிகட்சியின் கருத்து வேறுபாடு உள்ளது .முரண்பாடு எல்லோரிடத்திலும் உள்ளது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இபிஎஸ்க்கு அங்கீகாரம்- ஸ்டாலினுக்கு ஏமாற்றம்
மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் மாலையில் சிறப்பு வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உணவு வழங்கும் வகையில் 100 அரிசி மூட்டைகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் அதிமுக- பாஜக கூட்டணி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதப் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் வலதுபுறத்தில் எடப்பாடியாரும், இடதுபுறத்தில் நட்டாஜியும் அமர்ந்திருக்கிறார்கள். இந்தியா கூட்டணியில் ஸ்டாலினுக்கு அங்கீகாரம் கிடைக்காத வகையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடியாருக்கு தேசிய கூட்டணியில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்ததாக தெரிவித்தார்.
இந்தியா கூட்டணியில் முரண்பாடு
அந்த கௌரவம் தமிழ் நாட்டு மக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் மிகப்பெரிய பெருமையாகும் என தெரிவித்தார். அதிமுக -பாஜக கூட்டணி முறிந்துள்ளதாக கூறப்படுவது தொடர்பான கேளவிக்கு முரண்பாடு எங்கே இல்லை? இந்தியா கூட்டணியில் மேற்கு வங்காளம் கேரளாவில் கூட்டணி சேரமாட்டோம் என்று கம்யூனிஸ்ட் சொல்கிறது. டெல்லி, பஞ்சாப், குஜராத்தில் இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மிகட்சியின் கருத்து வேறுபாடு உள்ளது .முரண்பாடு எல்லோரிடத்திலும் உள்ளதாக தெரிவித்தார். அதே நேரத்தில் எடப்பாடியார் நிதானத்தோடு, பெருமையாக விட்டுக் கொடுத்து வருகிறார்.
பிரதமராக மோடி தான் வர வேண்டும்
அண்ணாவின் பொன்மொழியான எதையும் தாங்கும் இதயம், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்ற அமுதமொழிகளை கடைப்பிடித்து வருகிறார். தொண்டர்களும், பொதுமக்களும் பாரத பிரதமராக மோடிஜி வரவேண்டும் அதேபோல் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடியார் வரவேண்டும் என எதிர்பார்த்து வருவதாக தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் எடப்பாடியார் கிடைத்த முக்கியத்துவம் இதயத்தில் பசுமையான நினைவுகளாக உள்ளது.