முதன்முறையாக ராஜ்பாத் மீது சீறிப்பாய்ந்த ரஃபேல் விமானம்.. மூவர்ண கொடிக்கு சல்யூட் அடித்த பங்களாதேஷ் ராணுவம்.

By Ezhilarasan BabuFirst Published Jan 26, 2021, 1:47 PM IST
Highlights

அதேபோல் இந்த அணிவகுப்பின் மற்றொரு சிறப்பு அம்சமாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் முதல்முறையாக பங்களாதேஷ் ராணுவக் வீரர்களின் அணிவகுப்பு இடம்பெற்றது. இதற்கு பங்களாதேஷ் ராணுவத்தின் லெப்டினன்ட் கேணல் முகமது ஷமூர் ஷாபன் தலைமை தாங்கினார். 

நாட்டின் 72வது குடியரசு தின விழாவில் முதல்முறையாக ரபேல் போர் விமானம் கலந்து கொண்டு ராஜ்பாத் மீது சாகசம் நிகழ்த்திக் காட்டியது. அதேபோல் முதல் முறையாக பங்களாதேஷ் ராணுவ வீரர்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

எந்த குடியரசு தின விழாவிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பல சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. அதாவது கொரோனா தோற்று எதிரொலியாக 55 ஆண்டுகளில் முதல் தடவையாக குடியரசு தின விழா எந்த சிறப்பு விருந்தினரும் இன்றி நடைபெற்றுள்ளது. முன்னதாக 1952, 1953 மற்றும்  1966 ஆம் ஆண்டு களிலும்கூட இதேபோன்று சிறப்பு விருந்தினர் இன்றி குடியரசு தின விழா நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. 

குடியரசு தின விழா அணிவகுப்பின் சிறப்பம்சம்: இந்திய விமானப் படையின் வலிமையை பறைசாற்றும் வகையில் விமானப்படையின் திரினேத்ரா உருவாக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இது திரிசூல உருவாக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் முதல் முறையாக இந்தியாவின் ரபேல் ஜெட் போர் விமானம் இடம்பெற்றது. கடந்த ஆண்டு ரஃபேல் போர் விமானத்தின் முதல் தொகுதி விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்கள் சாகசம் செய்து காட்டின. அதன் சாகசம் பார்வையாளர்களுக்கு சிலிர்ப்பூட்டும் வகையில் இருந்தது. ரஃபேல்-2,  ஜாக்குவார் டீப் ஸ்டிரைக் போர் விமானம் மற்றும் மிக்-29 விமானங்களும் அதில் இடம்பெற்றிருந்தன. அவைகள் ராஜ்பாத் மீது விண்ணில் சீறிப்பாய்ந்து சாகசம் செய்தன. 

சுமார் 300 மீட்டர் உயரத்தில் 780 கிலோ மீட்டர் வேகத்தில் இச்சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன. விமானப்படையின் சாகச நிகழ்ச்சிக்கு ரோஹித் கட்டாரியா தலைமை தாங்கினார். அதேபோல் இந்த அணிவகுப்பின் மற்றொரு சிறப்பு அம்சமாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் முதல்முறையாக பங்களாதேஷ் ராணுவக் வீரர்களின் அணிவகுப்பு இடம்பெற்றது. இதற்கு பங்களாதேஷ் ராணுவத்தின் லெப்டினன்ட் கேணல் முகமது ஷமூர் ஷாபன் தலைமை தாங்கினார். இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்களாதேஷ் ராணுவம் பங்கேற்பது இதுவே முதல் முறை ஆகும். இந்தக் குழுவில் மொத்தம் 122 ஜவான்கள் இடம்பெற்றிருந்தனர்.

அதேபோல், இந்த குடியரசு தினத்தில் முதல்முறையாக யூனியன் பிரதேச அந்தஸ்தைப் பெற்றுள்ள லடாக் மாநிலத்தின் கலை, கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றும் வகையில் அதன் கலாச்சார அணிவகுப்பு இடம்பெற்றிருந்தது. அதேபோல், குடியரசு தின விழாவின் தொடக்கமாக இந்தியா கேட்டில் உள்ள தேசிய போர் நினைவுச்  சின்னத்தில் பிரதமர் மோடி மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். அப்போது அவர் ஜாம்நகர் அரச குடும்பத்தால் பரிசளிக்கப்பட்ட தலைப்பாகையை அணிந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!