மேடைக்கு வர மறுத்த முன்னாள் அமைச்சர்! தி.மு.க ஆர்பாட்டத்தில் வெடித்த கோஷ்டி பூசல்!

By vinoth kumarFirst Published Sep 19, 2018, 10:37 AM IST
Highlights

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க.வில் உள்ள கோஷ்டி பூசல் நேற்று நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது பகிரங்கமாக வெடித்தது. மாவட்டச் செயலாளர் நேரில் சென்று அழைத்தும் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் மேடைக்கு வர மறுத்துவிட்டார்.

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க.வில் உள்ள கோஷ்டி பூசல் நேற்று நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது பகிரங்கமாக வெடித்தது. மாவட்டச் செயலாளர் நேரில் சென்று அழைத்தும் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் மேடைக்கு வர மறுத்துவிட்டார். ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க.வின் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் சுப.தங்கவேலன். 35 ஆண்டுகளாக தி.மு.க.வின் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக இவரும், இவரது இரு மகன்களும் மட்டுமே இருந்து வந்தனர்.

ராமநாதபுரத்தில் இவர்களை மீறி கட்சியில் யாராலும் வளர முடியவில்லை. இந்த சூழ்நிலையில் தான் 2011 சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க தோற்றது.  இதனை தொடர்ந்து மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து சுப.தங்கவேலன் மாற்றப்பட்டாலும் அவரது மகன் சம்பத் மாவட்டச் செயலாளர் ஆனார். அவரும் கோஷ்டி அரசியல் செய்த காரணத்தினால் மீண்டும் சுப.தங்கவேலன் மாவட்டச் செயலாளர் ஆனார்.

ஆனால் அவர் மீது சில மோசடி வழக்குகள் பதியப்பட்டதால், மற்றொரு மகனான திவாகரனை மாவட்டச் செயலாளர் ஆக்கினார். திவாகரன் மாவட்டச் செயலாளர் ஆனதும் அ.தி.மு.க நிர்வாகிகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. இதனால் அவரை மாற்றிவிட்டு கமுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் மாவட்டச் செயலாளர் ஆனார். 

இவருக்கு சுப.தங்கவேலன் தரப்பு எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை என்கிற புகார் உள்ளது. இந்த நிலையில் நேற்று ராமநாதபுரத்தில் தமிழக அரசுக்கு எதிரான ஆர்பாட்டத்தை முத்துராமலிங்கம் தடல் புடலாக ஏற்பாடு செய்திருந்தார். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தொண்டர்களை ராமநாதபுரத்திற்கு கூட்டி வந்து குவித்தார். சொன்ன நேரத்திலும் ஆர்பாட்டத்தை முத்துராமலிங்கம் தொடங்கினார். மேடையில் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் தமிழக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பிக் கொண்டிருந்த நிலையில் திடீரென சுப.தங்கவேலன் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக ஆர்பாட்டம் நடைபெற்ற இடத்திற்குள் முழக்கமிட்டுக் கொண்டே நுழைந்தார்.  

இதனால் ஒரே இடத்தில் இரண்டு குழுக்களாக அ.தி.மு.க அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுந்தன. இருந்தாலும் கூட கட்சியின் சீனியர் என்பதால் மேடையில் இருந்து இறங்கி முத்துராமலிங்கம் ஓடோடிச் சென்று சுப.தங்கவேலனை மேடைக்கு வருமாறு அழைத்தார். ஆனால் சுப.தங்கவேலன் மேடைக்கு வர மறுத்துவிட்டார். மாவட்டச் செயலாளர் எவ்வளவோ கேட்டும் சுப.தங்கவேலன் மேடை ஏறாத நிலையில் அவரது ஆதரவாளர்கள் அங்கு தனி ஆவர்த்தனம் நடத்திக் கொண்டிருந்தனர். இதனால் ஆர்பாட்டம் முடிந்து சோகத்துடன் முத்துராமலிங்கம் புறப்பட்டுச் சென்றார். மேலும் சுப.தங்கவேலனுக்கு எதிராக ஸ்டாலினை சந்தித்து புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ளார்.

click me!