தினகரனுடன் கைகோர்க்கும் மதுசூதனன் ! அதிர்ச்சியில் அ.தி.மு.க...

By sathish kFirst Published Sep 19, 2018, 10:00 AM IST
Highlights

அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் தினகரன் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் வந்துவிட்டு எந்தவித எதிர்ப்பையும் சந்திக்காமல் சென்றுள்ளது அ.தி.மு.க தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் தினகரன் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் வந்துவிட்டு எந்தவித எதிர்ப்பையும் சந்திக்காமல் சென்றுள்ளது அ.தி.மு.க தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
   
ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட மதுசூதனனை வீழ்த்தி தினகரன் வெற்றி பெற்றார். இதனால் தினகரன் மீது மதுசூதனன் மிகுந்தஎரிச்சலில் இருந்தார். மேலும் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து ஆர்.கே.நகர் மக்களை ஏமாற்றி தினகரன் வென்றுவிட்டதாகவும் பிரச்சாரம் செய்து வந்தார். இதனை தொடர்ந்து ஆர்.கே.நகருக்கு தினகரன் வரும் போதெல்லாம் அவருக்கு அங்கு எதிர்ப்பு கிளம்பும்.


   
எம்.எல்.ஏவானி பிறகு முதல் முறையாக தினகரன் ஆர்.கே.நகருக்குள் நுழைந்த போது பொதுமக்கள் 20 ரூபாய் நோட்டை காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் பின்னணியில் மதுசூதனன் இருப்பதாக அப்போதே தினகரன் குற்றஞ்சாட்டினார். இதன் பிறகு மறுபடியும் தினகரன் ஆர்.கே.நகருக்குள் நலத்திட்ட உதவிகளை துவக்கி வைக்க சென்றார். அப்போதும் பெண்கள் 20 ரூபாய் நோட்டை தூக்கி காட்டியதால் அ.ம.மு.கவினர் அவர்களை நையப்புடைத்தனர்.
    
இந்த விவகாரத்தில் அ.ம.மு.கவின் நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அண்மையில் கூட தினகரன் தனது எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு சென்ற போது அப்பகுதியில் திரண்ட மதுசூதனன் ஆதரவாளர்களுக்கும் – தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் மூண்டது. கற்கள் வீசப்பட்டதில் போலீசாருக்கு கூட மண்டை உடைந்தது. கூட்டுறவு சங்க தேர்தல் சமயத்தில் கூட அ.ம.மு.க – மதுசூதனன் ஆதரவாளர்கள் மோதிக் கொள்ளும் சூழல் உருவானது. 


   
இந்த நிலையில் நேற்று தினகரன் மீண்டும் ஆர்.கே.நகருக்கு சென்றார். எதிர்ப்பு இருக்கும் என்று முன்னேற்பாடுகளுடன் அவர் சென்றார். போலீசாரும் வழக்கம் போல் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தினகரனே ஆச்சரியப்படும் வகையில் எந்த இடத்திலும் அவருக்கு எதிர்ப்பு எழவில்லை. வந்த வேலையை முடித்துவிட்டு அமைதியாக தினகரனும் திரும்பிவிட்டார்.
   
இது குறித்து விசாரித்த போதுதான், அ.தி.மு.கவில் தனக்கு உரிய முக்கியத்துவம் இல்லை என்று மதுசூதனன் பீல் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கூட்டுறவு சங்க தேர்தலில் கூட தனது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்க முடியாத நிலையில் அவைத்தலைவராக இருந்த என்ன பலன் என்றும் மதுசூதனன் யோசிக்கிறாராம். எத்தனையோ முறை ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ்சை சந்தித்து முறையிட்டும் வட சென்னையில் ஜெயக்குமார் ஆதிக்கம் குறையவில்லையாம்.


   
இந்த நிலையில் தினகரன் தரப்பில் இருந்து தொடர்ந்து மதுசூதனனுக்கு தூது அனுப்பப்பட்டு வருகிறது. அந்த தூதை உடனடியாக ஏற்கவில்லை என்றாலும் கூட தற்போதைக்கு தினகரனுடன் மோதல் போக்கு வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்த காரணத்தினால் தான் மதுசூதனன் ஆர்.கே.நகரில் நேற்று எந்த பிரச்சனையும் செய்யவில்லையாம். மேலும் இதனை தினகரன் தரப்பிற்கு மதுசூதனன் காட்டிய வெள்ளைக் கொடி என்றே கட்சிக்குள் பேசிக் கொள்கிறார்கள். அ.தி.மு.க அவைத் தலைவராக உள்ள மதுசூதனன் தினகரனுடன் சுமூகமானால் கட்சியில் தேவையில்லாமல் நிர்வாக சிக்கல் ஏற்படும் என்பதால் தலைமை அதிர்ச்சியில் உள்ளதாம்.

click me!