
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் பிரபல ரவுடிகள் 12 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி தனது வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில், காவிரி ஆற்றின் கரையில் இருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து, தில்லை நகர் போலீசார் முதலில் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கொடூரமான முறையில் ராமஜெயம் கொலை செய்யப்பட்டிருந்தார். இவரது கொலை வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க;- ராமஜெயம் கொலை குற்றவாளிகள் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்களா? குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் எடுத்த அதிரடி முடிவு.!
கொலை வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் பல ஆண்டுகளாகியும் கொலையாளியின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை. இதனையடுத்து, இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. பின்னர், ராமஜெயத்தின் சகோதரரான ரவிச்சந்திரன், இந்த வழக்கை தமிழக போலீஸாரே விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள், சிறையில் உள்ள கைதிகள், ராமஜெயம் கடத்தப்பட்ட இடத்தில் இருந்து அந்த சமயத்தில் செல்போனில் பேசியவர்கள் என 1400க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க;- ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. குற்றவாளிகளை நெருங்கிய போலீஸ்.. விசாரணை வளையத்தில் 2 பேர்.!
இதில், 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மோகன்ராம், சாமி ரவி, நரைமுடி கணேசன், சீர்காழி சத்யராஜ், மாரிமுத்து, தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், சண்முகம், ராஜ்குமார், சுரேந்தர், சிவகுணசேகரன், கலைவாணன் ஆகியோரிடம் சோதனை நடத்த அனுமதி வேண்டி சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அவர்கள் அனைவரும் வரும் நவம்பர் 1ம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.