யாருடன் கூட்டணி.... அதிமுகவா.? பாஜகவா.? பாமகவின் நிலைப்பாடு என்ன.? இன்று முக்கிய முடிவு எடுக்கிறார் ராமதாஸ்

By Ajmal KhanFirst Published Jan 30, 2024, 9:14 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாமக எந்த கட்சியோடு கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட போகிறது என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனவே இது தொடர்பாக ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.  

சூடு பிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு சில வாரங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக 3 வது முறையாக ஆட்சியை கைப்பற்ற பாஜக பல்வேறு மாநிலங்களில் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதே போல பாஜகவிற்கு எதிராக இந்தியா கூட்டணி தலைவர்களும் திட்டம் வகுத்து வருகின்றனர்.

Latest Videos

 தமிழகத்தை பொறுத்தவரை திமுக- அதிமுக- பாஜக- நாம் தமிழர் என்ற வகையில் போட்டியானது அமையவுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்,கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதே போல அதிமுக கூட்டணியில் தற்போது வரை எஸ்டிபிஐ, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

அதிமுக- பாஜக கூட்டணியில் யார்.?

பாஜக கூட்டணியில் ஐஜேக, புதிய நீதி கட்சி  உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. எனவே பாமக, தேமுதிக, தமாக உள்ளிட்ட கட்சிகளை தங்கள் அணியில் சேர்க்க அதிமுக மற்றும் பாஜக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனவே இந்த கட்சிகள் இன்னும் தங்களது நிலைப்பாட்டை அறிவிக்காமல் உள்ளது. தேமுதிகவை பொறுத்தவரை பெரும்பாலும் பாஜக பக்கம் செல்லவே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தேமுதிக தலைவர் பிரேமலதா கூறுகையில், விஜயகாந்த் இறந்து ஒரு மாதம் கூட நிறைவடையவில்லை. இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக எந்தவித முடிவும் தற்போது வரை எடுக்கவில்லையென கூறியிருந்தார்.

இன்று முக்கிய முடிவு எடுக்கும் பாமக

அதே நேரத்தில் பாமக இன்று முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வட மாவட்டங்களில் அதிக வாக்கு சதவிகிதத்தை கொண்ட பாமக எந்த கூட்டணிக்கு சென்றாலும் அந்த கூட்டணிக்கு முக்கிய பலமாக இருக்கும் அந்தவகையில் ராமதாஸ் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி. ஜி.கே.மணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதையும் படியுங்கள்

நீலகிரி மக்களவை தொகுதி.. ஆ.ராசாவை வீழ்த்த பாஜக தேசிய தலைமை களமிறக்கப்போகும் வேட்பாளர் யார் தெரியுமா?

எனவே இன்றைய ஆலோசனையில் எந்த கட்சியுடன் கூட்டணி செல்லலாம், எங்கே சென்றால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என ஆலோசிக்கப்படவுள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு கூட்டணி தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இருந்த போதும் பாமக மாவட்ட செயலாளர்களுடன் அடுத்த கட்ட ஆலோசனைக்கு பிறகே கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!