டிராக் மாறும் ராமதாஸ்..! புது வியூகத்தில் பாமக..! டென்சனில் எடப்பாடியார்..!

By Selva KathirFirst Published Aug 16, 2021, 10:56 AM IST
Highlights

விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வட மாவட்டங்களில் திமுகவை வீழ்த்த பாமகவைத்தான் அதிமுக பெரிதும் நம்பியுள்ளது. இதனால் தான் ராமதாஸ் மற்றும அன்புமணிக்கு எதிராக பேசிய பெங்களூர் புகழேந்தியை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கி கறார் காட்டினார் எடப்பாடி பழனிசாமி. 

சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு பாமக – அதிமுக கூட்டணி தாமரை இலை தண்ணீர் போல் மாறியுள்ள நிலையில் ஒரு சில செயல்பாடுகள் எடப்பாடி பழனிசாமியை மிகுந்த ஆத்திரம் அடைய வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வட மாவட்டங்களில் திமுகவை வீழ்த்த பாமகவைத்தான் அதிமுக பெரிதும் நம்பியுள்ளது. இதனால் தான் ராமதாஸ் மற்றும அன்புமணிக்கு எதிராக பேசிய பெங்களூர் புகழேந்தியை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கி கறார் காட்டினார் எடப்பாடி பழனிசாமி. இத்தனைக்கும் புகழேந்தி மீது பாமக தரப்பில் இருந்து எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் கூட அவரை கட்சியில் இருந்து நீக்கியதற்கு காரணம் பாமக மனம் கோணிவிடக்கூடாது என்பதற்காகவே என்கிறார்கள். அத்துடன் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் ஏழு மாவட்டங்கள் வட மாவட்டங்கள்.

இந்த மாவட்டங்களில் அதிமுக கணிசமான வாக்குகளை பெற பாமக கூட்டணி உதவும். எனவே அதனை மனதில் வைத்து அதிமுக கவனமாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் சட்டப்பேரவை கூடிய நிலையில் அங்கு தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்பட அதிமுக விரும்பியது. ஆனால் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்கு ஏற்ப, கலைஞர் படத் திறப்பு விழாவில் பாமக, பாஜக போன்ற கட்சிகள் கலந்து கொண்டது அதிமுகவை அதிருப்தி அடைய வைத்தது. அத்தோடு பட்ஜெட் தாக்கலின் போதும் அதிமுக வெளிநடப்பு செய்யும் போது பாஜக மற்றும் பாமக வெளிநடப்பு செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்தார்.

கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியின் போது சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தால் கூடவே காங்கிரஸ் கட்சியும் எழுந்து சென்றுவிடும். அதே போன்ற ஒரு கூட்டணி தர்மத்தை தான் பாமகவிடம் அதிமுக எதிர்பார்த்ததாக கூறுகிறார்கள். ஆனால் பாமக சட்டப்பேரவையில் தனி ஆவர்த்தன்ம் நடத்தி வருகிறது. கலைஞர் படத்திறப்பு விழா, ஸ்டாலின் பதவி ஏற்று 100வது நாள் போன்ற நிகழ்வுகளில் பாமக திமுகவிற்கு அணுசரணையாகவே சென்றுள்ளது. இதே போல் கடந்த காலங்களில் திமுக ஆட்சியின் போது கூட்டணியில் இருந்தாலும் கூட ஆட்சி மீது ராமதாஸ் வைக்கும் விமர்சனங்கள் சுளீர் ரகமாக இருக்கும்.

ஆனால் தற்போது ராமதாஸ் திமுக அரசை பெரிய அளவில் விமர்சிப்பது இல்லை. அத்தோடு பட்ஜெட்டை கூட விமர்சிக்காமல் சிறிது பாராட்டியே அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கெல்லாம் காரணம் உள்ளாட்சித் தேர்தலில் பாமக புதிய டிராக்கில் பயணிக்க திட்டமிட்டுள்ளது தான் என்கிறார்கள். அதாவது பாமக – திமுக இடையே ரகசிய உடன்பாடு எட்டப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. அதாவது இந்த ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலின் போது பாமக தனித்து போட்டி என்று அறிவித்து களம் இறங்கும் என்றும் அதிலும் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே பாமக வேட்பாளர்களை அறிவிக்கும் என்றும் அந்த இடங்களில் திமுக நிற்காமல் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி பாமகவிற்கு உதவும் என்று சொல்கிறார்கள்.

இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துவிட்டதாகவும், எனவே உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி என்று ராமதாஸ் விரைவில் அறிவிப்பார் என்கிறார்கள். திமுகவும் இதற்கு பிரதிபலனாக நகர்புற உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் பாமகவிற்கு கணிசமான அளவில் நகராட்சித் தலைவர் பதவிகளை விட்டுக் கொடுக்கலாம் என்கிறார்கள். வட மாவட்டங்களில் பாமக – அதிமுக கூட்டணியை உடைக்க திமுக இப்படி ஒரு வியூகம் வகுத்துள்ளதாகவும் ஆனால் இந்த ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் சோதனை முயற்சியாக ராமதாஸ் இப்படி ரிஸ்க் எடுப்பர் என்றும் சரியான முடிவு கிடைத்தால் நகர்பற உள்ளாட்சித் தேர்தலிலும் இது நீடிக்கும் என்கிறார்கள்.

இதனிடையே ராமதாஸ் தள்ளிப் போவதன் பின்னணியின் திமுகவுடனான ரகசிய உடன்பாடு காரணமாக இருக்கலாம் என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சந்தேகம் உள்ளதாகவும் இதனால் தேர்தல் சமயத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்திய ஜி.கே.மணியை அழைத்து எடப்பாடி பழனிசாமி பேசியதாகவும், திமுகவை நம்ப வேண்டாம், அதிமுக கூட்டணியில் இருந்தாலே கணிசமான இடங்களை பாமக வெல்ல முடியும் என்று கூறி சில வியூகங்களை எடப்பாடி கூறியதாகவும் சொல்கிறார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் அய்யா ஏற்கனவே முடிவெடுத்துவிட்டதாகவும் முடிவில் மாற்றம் இருந்தால் தெரிவிப்பதாக எடப்பாடியாருக்கு பாமக தரப்பில் இருந்து பதில் வர அவர் கடும் ஆத்திரத்தில் இருப்பதாக கூறுகிறார்கள்.

click me!