
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர பணியாளர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தொழிலாளர்களின் ஊதியம் பெறும் உரிமை தொடர்பாக கடந்த 25-ந்தேதி உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கதாகும். ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற பெயரில் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்படும் மக்களை அடிமைத்தளையிலிருந்து மீட்க இந்தத் தீர்ப்பு பெருமளவில் உதவும் என தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி ஒருவர், நிரந்தர பணியாளர்களுக்கு இணையாக தமக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரி தொடர்ந்த வழக்கில்,
நிறுவனங்களில் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும் அதே ஊதியம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். சம வேலை, சம ஊதியம் என்ற தத்துவத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும்’’ என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதி மன்ற நீதியரசர்கள் ஜே.எஸ். கெஹர், எஸ்.ஏ. பாப்டே ஆகியோர் இத்தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
குறைந்த ஊதியத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால் தம்மை நம்பியிருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படிப்பட்டவர்களுக்கு, அவர்களுக்கு இணையான பணி செய்பவர்களைவிட குறைந்த ஊதியம் வழங்கப்படுவது அது அவர்களை அடிமைப்படுத்துவதற்கு சமமாமாகும். இது அடக்கி, ஒடுக்கி அச்சுறுத்தும் செயல் என்பதில் ஐயமில்லை’’என்று நீதிபதி கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிபதி குறிப்பிட்ட ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்க்கையில் நிறைந்திருக்கும் வலியை உணர்ந்து அவர்களுக்கு நிரந்தர பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவதுடன், பணி நிலைப்பும் வழங்கப்பட வேண்டும்.
இதுதொடர்பாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு உரிய ஆணைகள் மற்றும் வழி காட்டுதல்களை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.