"உச்சநீதிமன்றம் சொல்லிடுச்சுல்ல... சாலையோர டாஸ்மாக் கடைகளை உடனே மூடுங்க" - ராமதாஸ் சாட்டையடி

First Published Mar 30, 2017, 1:40 PM IST
Highlights
ramadoss request to close tasmac shops


உச்சநீதிமன்ற அறிவுரையை  ஏற்று சாலையோர மதுக்கடை உடனே மூட வேண்டும் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை நாளைக்குள் அகற்ற வேண்டும் என்ற உத்தரவை மாற்றியமைக்க வேண்டும் என்ற என்று கோரிய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நிலைப்பாடு  தமிழக மக்கள் நலனில் அதிமுக அரசுக்கு அக்கறையில்லை என்பதை அப்பட்டமாக நிரூபித்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கெஹர் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது, மதுக்கடைகளை மூடாமல் இருப்பதற்காக தமிழக அரசின் சார்பில் வாதிட்ட முகுல் ரோகத்கி முன்வைத்த வாதங்கள் ஏற்கமுடியாதவை; அபத்தமானவை.

மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் ரூ.25,500 கோடியை நம்பித் தான் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று கூறியதன் மூலம் தமிழக அரசு மது விற்பனையைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை என்பது அம்பலமாகி இருக்கிறது.

சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளில் தமிழகம் தான் முன்னணியில் உள்ளது. முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தான் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளை  கட்டுப்படுத்த முடியும் எனும் போது, அதற்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு மேற்கொள்வதை ஏற்க முடியாது. இது தமிழகத்திலுள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் சீரழிவுக்கே வழிவகுக்கும்.

தமிழகத்தில் இப்போது 5,672 மதுக்கடைகள் மட்டுமே உள்ளன. உச்சநீதிமன்றத் தீர்ப்பு முழுமையாக செயல்படுத்தப்பட்டால் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் அவற்றிலிருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள 3,321 மதுக்கடைகள் அகற்றப்பட வேண்டும். அவற்றில் 1770 மதுக்கடைகளை வேறு இடத்திற்கு  மாற்ற முடியாது என்பதால் அவை அனைத்தையும் மூடுவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை.

இப்படி ஒரு நிலை ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தான் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற ஆணையிட வேண்டும் என்று கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் துணை அமைப்புகளில் ஒன்றான வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்தியா திவாலாகிவிடும் என்றால் கூட மதுவிலக்கைத் தான் நான் நடைமுறைப்படுத்துவேன் என்று மகாத்மா காந்தியடிகள் பலமுறை கூறியிருக்கிறார். அதாவது ஒரு நாடோ அல்லது மாநிலமோ மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பியிருக்கக் கூடாது என்பதைத் தான் மகாத்மா காந்தியடிகள் அவ்வாறு குறிப்பிட்டார்.

ஆனால், காந்தியடிகளை தேசப்பிதாவாக ஏற்றுக் கொண்ட ஒரு மாநில அரசு, மதுக்கடைகளை மூடிவிட்டால் அரசு நிர்வாகத்தையே நடத்த முடியாது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது அரசின் தோல்வியை காட்டுகிறது. மதுக்கடைகளை மூடிவிட்டால் ஆட்சி நடத்த வருவாய் இருக்காது என்று கூறி மீண்டும்  மதுக்கடைகளை நடத்த துடிப்பதை விட, தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலகுவது தான் சரியானதாக இருக்கும்.

தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு உச்சநீதிமன்றமும் கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறது. மது விற்பனையால் லாபம் கிடைக்கிறது என்பதற்காக மதுக்கடைகளை நடத்துவதை ஏற்கமுடியாது என்று  கண்டனம் தெரிவித்த நீதிபதிகள்,‘‘ அரசுக்கு வருவாய் கிடைப்பதை உறுதி செய்வதற்காக சாலை விபத்துக்களில் மக்கள் உயிரிழப்பதை தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறதா?

ஒரு குடும்பத்தில் வருவாய் ஈட்டும் தனிநபர் மது அருந்தி விட்டு சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டால், அவரது குடும்பம்  கடுமையான பொருளாதார நெருக்கடியில் தள்ளப்படும் என்பதாவது தெரியுமா?’’ என்றும் சரமாரியாக வினா எழுப்பினார்கள். நீதிபதிகள் எழுப்பிய வினாக்கள் அர்த்தமுள்ளவை; பாராட்டப்பட வேண்டியவை.

எனவே, இதற்குப் பிறகும் மதுக்கடைகளை மூடினால் அரசின் வருமானம் குறைந்து விடும் என்பதையே தமிழக அரசு மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்கக் கூடாது. தமிழகத்தின் இன்றைய தேவை முழு மதுவிலக்கு என்பதால் உச்சநீதிமன்றம் ஆணையிட்டவாறு  மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் உள்ள 3321 மதுக்கடைகளையும் தமிழக அரசு உடனடியாக மூட வேண்டும். அடுத்தக்கட்டமாக மீதமுள்ள மதுக்கடைகளையும் மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

click me!