தமிழகத்தை காவு கொடுக்க துடிக்கும் பாஜக.. கேள்விகேட்ட நிருபரை தேச துரோகியாக்கிய எச்.ராஜா....

Asianet News Tamil  
Published : Mar 30, 2017, 12:24 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
தமிழகத்தை காவு கொடுக்க துடிக்கும் பாஜக.. கேள்விகேட்ட நிருபரை தேச துரோகியாக்கிய எச்.ராஜா....

சுருக்கம்

h raja says modi haters are anti nationals

தமிழ்நாட்டில், காங்கிரஸ் ஆட்சியை இழந்து 50 ஆண்டுகள் ஆகிறது. பா.ஜ.க வேர்விடுவதற்கே போராடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், பா.ஜ.க வை எப்படியாவது தமிழ்நாட்டில் தழைக்க வைக்க, பா.ஜ.க தேசிய தலைவர்கள் தலையால் தண்ணீர் குடித்து வருகின்றனர்.

ஆனால், இங்குள்ள மாநில தலைவர்கள் அனைவரும், போட்டி போட்டுக்கொண்டு தமிழக மக்களின் வெறுப்பை தொடர்ந்து சம்பாதித்துக் கொண்டு வருகின்றனர்.

அக்கட்சியின் இல.கணேசன், ஹைட்ரொ கார்பன் திட்ட விவகாரத்தில், நாட்டுக்காக தமிழகத்தை தியாகம் செய்யவேண்டும் என்று கூறி  பரபரப்பை ஏற்படுத்தினார்.

அந்த பரபரப்பு  அடங்குவதற்குள், விவசாயிகள் நிவாரணம் குறித்து, கேள்வி எழுப்பிய செய்தியாளர் ஒருவரை தேச துரோகி என்று சொல்லி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் எச்.ராஜா.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, இத்தாலி நாட்டை சேர்ந்த, வெள்ளைக்காரி சோனியா காந்திக்கு எதிராக விவசாயிகள் போராடவில்லை என்றார்.

மேலும், சோனியா காந்தியை பார்த்து ஊடகங்கள் எல்லாம் பயந்தன. அவரை விமர்சிக்கவில்லை. ஆனால் மோடியை மட்டும் கடுமையாக விமர்சித்து வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.

அப்போது, கென்யாவுக்கு கொடுக்கும் நிதியை விவசாயிகளுக்கு கொடுக்கலாமே என்று கேள்வி எழுப்பிய செய்தியாளர் ஒருவரை, கோபம் போங்க  தேச துரோகி என்று கூறிய அவர், மோடி பற்றி கேள்வி கேட்க உரிமை இல்லை என்றும் காட்டமாக கூறினார்.

அதற்கு, வரி கட்டும் எனக்கு கேள்வி கேட்க உரிமை உள்ளது என்று பதில் சொன்ன செய்தியாளரிடம், உங்கள் வரிப்பணத்தை வேண்டுமானால் திருப்பி அளித்து விடுகிறேன் என்றும் கூறினார்.

அப்படி என்றால், மோடிக்கு எதிரான கேள்விகளை முன் வைக்கும் அனைவரது வரிப்பணத்தையும், அவர் திருப்பி கொடுத்துவிடுவாரா? என்று செய்தியாளர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

எம்.எல்.ஏ., எம்.பி., என எந்த பொறுப்பிலும் இல்லாமல், கட்சி பொறுப்பு மட்டுமே வகிக்கும் அவருக்கு, வரிப்பணத்தை திருப்பிக் கொடுக்க என்ன அதிகாரம் உள்ளது? என்பதை மத்திய அரசுதான் விளக்க வேண்டும்.

அடுத்து, ஒரு ஜனநாயக நாட்டில், ஆட்சியாளர் எடுக்கும் அத்தனை முடிவையும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது கூட ராஜாவுக்கு தெரியவில்லை.

ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது, சுப்ரமணிய சாமியை எதிரான கருத்துக்களை உதிர்க்க சொல்லிவிட்டு, இவர்களை போன்றவர்கள் ஆதரவு தெரிவிப்பது போல நாடகம் ஆடியது மக்களுக்கு தெரியாதா?.

அதுவே, ஹைட்ரொ கார்பன் திட்டத்திற்கு எதிராக, மக்கள் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டபோது, அங்கு சமூக விரோதிகள் ஊடுருவி இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியவரும்  எச்.ராஜாதான்.

இவருடைய கண்ணோட்டத்தில், பாரதிய ஜனதாவுக்கும், மோடிக்கும் எதிரான சிந்தனை கொண்டவர்கள் அனைவரும் சமூக விரோதிகள் அல்லது தேச துரோகிகள்.

அதனால்தான், மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் செய்தியாளர் ஒருவரையே, அவர் தேச துரோகி என்று விமர்சித்துள்ளார்.

என்னதான் குறைபாடுகள் இருந்தாலும், திராவிட கட்சிகளை ஏற்கும் தமிழக மக்கள், தேசிய கட்சிகளை அதிலும் குறிப்பாக பா.ஜ.க வை ஏன் புறக்கணிக்கிறார்கள் என்பதற்கு இவர்களை போன்றவர்களே காரணம்.

ஒரு பகுதியில் விற்பனையாகும் சரக்குகள், மற்றொரு பகுதியிலும் விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்க முடியாது. பா.ஜ.க வின் கொள்கையும் அப்படிப்பட்டதுதான்.

அடுத்து சரக்குகளை மார்க்கெட்டிங் செய்யும் சாதுர்யமும் எச்.ராஜா போன்ற தலைவர்களுக்கு இல்லை என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டு விட்டது.

எந்த இடத்தில், எந்த சரக்கு விலை போகும் என்று தெரியாமல், ஏதோ ஒன்றை எடுத்து வந்து அதை விற்பனை செய்ய துடிக்கிறது பா.ஜ.க. அது இங்கே விலைபோகவில்லை என்றதும் விரக்தியில் புலம்புகிறது.

அந்த புலம்பலின் வெளிப்பாடுதான், இல.கணேசனை  தமிழகத்தை தியாகம் தூண்டுகிறது. எச்செ.ராஜாவை, கேள்வி கேட்போர் அனைவரையும் தேச துரோகி என சொல்ல வைக்கிறது.

பா.ஜ.க வை மக்கள் ஏற்கவில்லை. திராவிட கட்சிகளும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவில்லை. தேமுதிக போன்ற சிறிய கட்சிகள் கூட விரட்டி, விரட்டி அடிக்கின்றன.

இதெல்லாம் ஏன் நடக்கிறது? என்று யோசித்து அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள முடியாமல், ஏதோ ஒன்றை மக்கள் மீது திணிக்கப் போராடினால் தோல்விதான் மிஞ்சும்.

இதை அதிகமாக ஆவேசப்படும், எச்.ராஜா, இல.கணேசன்  போன்றவர்கள்தான் மோடிக்கு எடுத்து சொல்ல வேண்டும்.

அதைவிட்டு, எதிர் கருத்து சொல்பவர்களை எல்லாம் தேச துரோகிகள் என்றால் உங்களால் தமிழ் நாட்டில் எப்படி கட்சியை வளர்க்க முடியும்?

PREV
click me!

Recommended Stories

திடீர் ட்விஸ்ட்..! தவெகவில் இணையும் பாஜக Ex மத்திய அமைச்சர்..! தட்டித் தூக்கும் விஜய்..!
தமிழகத்தில் எங்கேயுமே கஞ்சா இல்லையா? கொஞ்சம் கூட கூச்சமே கிடையாதா? அமைச்சரை வறுத்தெடுத்த அண்ணாமலை!