
புதுச்சேரி மாநிலத்திலும் அதிமுக பெயரை பயன்படுத்தக் கூடாது என ஓபிஎஸ் அணியினர் சபாநாயகர் வைத்தியலிங்கத்திடம் மனு அளித்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்தது. சசிகலா தலைமையில் ஓர் அணியும், ஓபிஎஸ் தலைமையின் கீழ் ஓர்அணியும் செயல்பட்டு வருகிறது.
இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது. மேலும் அதிமுக என்ற பெயரை பயன்படுத்தகூடாது எனவும் உத்தரவிட்டது.
இதைப்போல புதுச்சேரி அதிமுக.விலும் பிளவு ஏற்பட்டு இரு அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள்.
புதுச்சேரி. மாநில அதிமுக செயலாளர் புருஷோத்தமன் மற்றும் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் 4 பேர் சசிகலாவுக்கு ஆதரவாகவும், முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் தலைமையில் மற்றொரு அணியினர் ஓபிஎஸ்க்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தைப் போலவே புதுச்சேரி சட்டப் பேரவையிலும் அதிமுக . பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் இன்று காலை சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து மனு அளித்தார்.
அதில் புதுச்சேரி சட்டசபையில் சசிகலா ஆதரவு எம்எல்.க்கள் அதிமுக என்ற பெயரை உபயோகப்படுத்தவும், இரட்டை இலை சின்னத்தை பற்றி பேசவும் தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டப்பேரவையில் தீர்மானங்களை முன்மொழியும் போது, அதிமுக அம்மா சசிகலா அணி என அவர்களை அழைக்க வேண்டும் எனவும் ஓம் சக்தி சேகர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.