
கடந்த 2 நாட்களுக்கு முன் திமுக செயல்வீரர்கள் கூட்டம் தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், ஆர்கே நகர் தொகுதி தேர்தல் பணிமனையில் நடந்தது.
அதில் பேசிய மு.க.ஸ்டாலின், ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியும் என கூறினார்.
ஏற்கனவே, ஓ.பி.எஸ். அணியினர், சசிகலா தரப்பினர் குறித்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த வேளையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஜெயலலிதாவின் மரணம் பற்றி தெரியும் என ஸ்டாலின் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தனது வேட்பாளார் மதுசூதனனை ஆதரித்து, ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது, அவர் பேசியதாவது:-
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று பொது மக்களுக்கும் சந்தேகங்கள் இருக்கிறது. இதை போக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த விஷயத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என நாங்கள் கோரி வருகிறோம்.
ஜெயலலிதா முதல்வராக இருந்து இறந்ததும், நான் முதல்வராகவும், மதுசூதனன், கட்சியின் பொதுச் செயலராகவும் இருந்து செயல்பட வேண்டும் என்று, கட்சியின் மூத்த தலைவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
சசிகலா அதற்கு ஒப்பு கொள்ளவில்லை. தானே, பொதுச் செயலராகவும் முதல்வராகவும் இருக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தார். இதை தாங்கள் ஏற்கவில்லை என்று, தற்போது அமைச்சர்களாக இருக்கும் பலரே, என்னிடம் தெரிவித்தனர். அவர்கள் மனநிலை, இன்றளவிலும் அப்படித்தான் உள்ளது.
ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, அந்த சிகிச்சை போதுமானதாக இல்லை என்று சிலர் கருத்துச் சொன்னார்கள்.
அதனால், ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று, மேல் சிகிச்சை அளிக்கலாம் என, தம்பிதுரை மூலமாக, சசிகலாவுக்கு எடுத்துச் சென்றேன். அதை மறுத்து, இங்கேயே சிறப்பான சிகிச்சை அளிக்கின்றனர் என சொல்லி விட்டனர்.
அதனால், என்னால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை. இருந்தபோதும், பல்வேறு விதமான சந்தேகங்கள் எல்லோரையும் போலவே, எங்களுக்கும் இருந்து கொண்டிருந்தது. அதனால்தான், விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று கூறுகிறோம்.
தற்போது, அ.தி.மு.க.வில் நிலவும் சர்ச்சைகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, குழம்பிய குட்டையில் ஸ்டாலின் மீன் பிடிக்க முயற்சிக்க வேண்டாம். இவ்வாறு பன்னீர்செல்வம் பேசினார்.