எல்லை அளவீடு என்ற பெயரில் தமிழர்களின் வீடுகளை அகற்ற முயல்வதா.? கேரளா அரசுக்கு எதிராக களமிறங்கும் ராமதாஸ்

By Ajmal KhanFirst Published Nov 27, 2022, 1:34 PM IST
Highlights

எல்லை அளவீடு என்ற பெயரில் மூணாறில் தமிழர்கள் வீடுகளை அகற்ற  முயலும் கேரளத்தின் செயல் கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் கூறியுள்ளார். எனவே தமிழக அரசு கேரள அரசின் செயல்பாட்டை கண்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

நில அளவீடு என்ற பெயரில் மூணாறு பகுதியில் தமிழர்களின் காலி செய்ய கேரளா அரசின் நிச்சிய தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளத்தின் எல்லைகள் டிஜிட்டல் முறையில் மறு அளவீடு செய்யப்பட்டு வருவதாக அறிவித்திருக்கும் கேரள அரசு, அதன் ஒரு கட்டமாக மூணாறில் வாழும் தமிழர்களின் வீடுகளை காலி செய்ய ஆணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்படும் எல்லை அளவீடு சட்டவிரோதம் எனும் நிலையில், அதைக் காரணம் காட்டி தமிழர்களின் வீடுகளை அகற்றத் துடிப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழக ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார்... வைகோ அதிரடி கருத்து!!

கேரள மாநிலத்தின் எல்லைகளை டிஜிட்டல் மறு அளவீடு செய்யும் பணி நவம்பர் 1&ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இதற்காக மூணாறை அடுத்த இக்கா நகரில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான 60 வீடுகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று தேவிகுளம் வட்டார வருவாய்த்துறையினர் அறிவிக்கை அனுப்பியுள்ளனர். தமிழர்கள் வீடுகளை காலி செய்யாவிட்டால், நாளை மறுநாள், நவம்பர் 29-ஆம் தேதி அந்த வீடுகள் இடிக்கப்படும் என்றும் தேவிகுளம் வருவாய்த்துறையின் எச்சரித்துள்ளனர்.கேரள அரசின் எல்லை அளவீட்டுக்கு மூணாறில் உள்ள தமிழர்களின் வீடுகள் எந்த வகையிலும் தடையாக இல்லை. அவர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்து வருகின்றனர்; உள்ளாட்சி அமைப்புகளுக்கு தவறாமல் வரி செலுத்தி வருகின்றனர். அதே பகுதியில் கேரளத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டியுள்ளனர். 

ஆனால்,  அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத தேவிகுளம் வருவாய்த் துறையினர், தமிழர்களுக்கு எதிராக மட்டும் நடவடிக்கை எடுப்பது பாகுபாடானது ஆகும். தமிழர்கள் என்ற ஒற்றை காரணத்திற்காகவே அவர்களை அங்கிருந்து அகற்ற கேரள அரசு துடிப்பதாகவே இந்த நடவடிக்கையை பார்க்கத் தோன்றுகிறது. அரசுக்கு சொந்தமான இடங்களில் தமிழர்கள் கட்டியுள்ள வீடுகளை அகற்ற வேண்டும் என்றால், அதற்கு முன்பாக அவர்களுக்கு நகர்ப்புற வளர்ச்சி வாரியம் மூலம் வீடுகளை கட்டித்தர வேண்டும். ஆனால், அதை செய்யாத கேரள அரசு மிகக் குறைந்த காலக்கெடுவுக்குள் அறிவிக்கை அனுப்பி, தமிழர்களின் வீடுகளை காலி செய்யும்படி நெருக்கடி தருவது நியாயமல்ல; அதை  ஏற்க முடியாது. கேரள அரசு மேற்கொண்டிருக்கும் எல்லை மறு அளவீடு, கேரளத்தில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்ல... தமிழ்நாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். கேரள மாநில எல்லையின் பெரும்பகுதி தமிழ்நாட்டை ஒட்டியுள்ளது. 

விதிகள் மற்றும் மரபுகளின்படி தமிழக அரசின் ஒப்புதலைப் பெற்று தான் எல்லைகளை கேரள அரசு மறு அளவீடு செய்ய வேண்டும். ஆனால், கேரள அரசு தமிழகத்தின் ஒப்புதலை பெறாமல் தன்னிச்சையாக எல்லைகளை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. கேரள அரசின் செயலால் இரு மாநில எல்லையோரங்களில் உள்ள தமிழக நிலப்பகுதிகள் பறிபோகும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.கேரள அரசின் எல்லை மறு அளவீட்டுப் பணிகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படாவிட்டால், தமிழக எல்லை ஆக்கிரமிக்கப்படுவது மட்டுமின்றி,

 மராட்டியத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே எவ்வாறு  எல்லைப் பிரச்சினை தீராத சிக்கலாக உருவெடுத்துள்ளதோ, அதேபோல் தமிழ்நாட்டிற்கும், கேரளத்திற்கும் இடையிலும் எல்லைச் சிக்கல் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கக் கூடும். அதை தடுத்து நிறுத்த வேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு; அதை அரசு தட்டிக்கழிக்கக் கூடாது. எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு கேரள அரசின் எல்லை மறு அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும். அத்துடன், மூணாறு பகுதியில் தமிழர்களின் வீடுகளை அகற்றும் முடிவை கைவிடும்படியும் அம்மாநில அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு..! தொண்டர்களுக்கு திடீர் உத்தரவிட்ட எடப்பாடி பழனிசாமி

click me!