'குறிப்பிட்ட பிரிவினர் தான் அதிகமாக கைப்பற்றுறாங்க'..! சாதிவாரி கணக்கெடுப்பிற்கு மீண்டும் சாட்டையை சுழற்றும் ராமதாஸ்..!

By Manikandan S R SFirst Published Jan 30, 2020, 10:13 AM IST
Highlights

ஒவ்வொரு பிரிவிலும் இட ஒதுக்கீட்டின் கணிசமான அளவை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் கைப்பற்றிக் கொள்கின்றனர். தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில், அப்பிரிவில் உள்ள அனைத்துப் பிரிவினருக்கும் சமமான அளவில் சமூகநீதி கிடைக்க வில்லை என்பது தான், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய இடஒதுக்கீட்டுப் பிரிவு தொடங்கப் படுவதற்கு காரணம் ஆகும்.

2021 ல் நடைபெற இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வலியுறுத்தி பிப் 6-ஆம் தேதி பாமக போராட்டம் நடத்த இருப்பதாக மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமூக நீதி என்பது துரோகங்களும், பாகுபாடுகளும், சமத்துவமின்மையும் நிறைந்த அகழியைத் தாண்டி கடக்கும் செயலாகும். ஆபத்து நிறைந்த அகழியை முழுமையாக தாண்டிக் கடக்காவிட்டால், எத்தகைய அழிவுகள் ஏற்படுமோ, அதேபோல் தான் சமூகநீதியையும் முழுமையாக வழங்காவிட்டால், அதனால் கிடைக்கும் பயன்களை விட, பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும். இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை முன்னேற்றுவதற்கு உதவும் போதிலும், யாருக்கு சமூகநீதி உண்மையாகவே தேவைப்படுகிறதோ, அவர்களுக்கு சமூகநீதி கிடைப்பதில்லை என்பது தான் உண்மை. தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பட்டியலினம், பழங்குடியினம் என 4 பிரிவுகளாக இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் இஸ்லாமியர்களுக்கும், பட்டியலினத்தவர்களில் அருந்ததியர்களுக்கும் உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு பிரிவிலும் இட ஒதுக்கீட்டின் கணிசமான அளவை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் கைப்பற்றிக் கொள்கின்றனர். தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில், அப்பிரிவில் உள்ள அனைத்துப் பிரிவினருக்கும் சமமான அளவில் சமூகநீதி கிடைக்க வில்லை என்பது தான், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய இடஒதுக்கீட்டுப் பிரிவு தொடங்கப் படுவதற்கு காரணம் ஆகும். ஆனால், அதன் பிறகும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு உள்ளிட்ட அனைத்து வகுப்புகளிலும் இட ஒதுக்கீட்டை சில சமுதாயங்கள் அதிக அளவில் கைப்பற்றிக் கொள்வது இன்று வரையிலும் நீடிக்கிறது. இந்த சமூகநீதி சுரண்டலுக்கு சிறந்த தீர்வு ஒவ்வொரு சாதிக்கும் அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது தான். அவ்வாறு இடஒதுக்கீடு வழங்க அடிப்படைத் தேவை சாதிவாரி மக்கள்தொகை கணக்கீடு ஆகும். அதேபோல், இன்று இடஒதுக்கீட்டை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்பதற்காக ஏராளமான சக்திகள் பணியாற்றி வருகின்றன. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக இரண்டாவது முறையாக தொடரப் பட்டுள்ள வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளிலும் இட ஒதுக்கீடு பெறும் சமுதாயங்களின் மக்கள்தொகை எவ்வளவு? என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்காவிட்டால் இடஒதுக்கீடு ரத்து செய்யப் படுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, இந்தியாவில் இப்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டை பாதுகாக்கவும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கட்டாயமாக தேவைப்படுகிறது.

ஆனால், தேசிய அளவிலும், மாநில அளவிலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த 10 ஆண்டுகளுக்கு முன் வாய்ப்பு கிடைத்த போது, அதை மத்தியிலிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், தமிழகத்தில் ஆட்சி செய்த திமுகவும் அதை திட்டமிட்டு முறியடித்து விட்டன. அது சமூக நீதிக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் ஆகும். ஆனால், அதன்பின்னர் நிலைமை சாதகமாக மாறியிருக்கிறது. 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காணும் வகையில் நடத்தப்படும் என்று 2018-ஆம் ஆண்டில் அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். இவ்விஷயத்தில் மத்திய அரசு இன்று வரை உறுதியாக இருக்கிறது. மத்திய அரசு அறிவித்த ஓபிசி கணக்கெடுப்புக்கும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. கணக்கெடுப்பு ஆவணத்தில் பிற பிற்படுத்தப்பட்டவர் என்று குறிப்பிடும் பகுதியில் அவரது சாதியையும் சேர்த்துக் குறிப்பிட்டால் போதுமானது.

அதுமட்டுமின்றி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பல தொகுப்புகளாக பிரித்து வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மிகவும் அவசியமாகும். அனைத்து மக்களுக்கு முழுமையான சமூகநீதி வழங்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தான் அச்சாணி எனும் நிலையில், அதை செயல்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முன்வர வேண்டும். 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வலியுறுத்தி, பாட்டாளி இளைஞர் சங்கம் சார்பில் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தொடர்முழக்கப் போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டம் எனது தலைமையில் நடைபெறவுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், பாட்டாளி இளைஞர் சங்கம், மாணவர் சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Also Read: 'கருணாநிதி ஒரு தீவிரவாதி'..! தம்பிகளிடம் பகீர் கிளப்பிய சீமான்..!

click me!